ஆக்கிரமிப்புகளை மீட்ட தனி மனுஷி

விவசாயம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாயகி, தனி ஒரு மனுஷியாகப் போராடி, சுமார் 10 கிமீ நீளமிருந்த ராதா வாய்க்காலை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து போராடி மீட்டுள்ளார்.

நமது விவசாய முறை பாரம்பரியம் நிறைந்தது. வேளாண் அறிஞர்களும் அறிவியலாளர்களும் சேர்ந்து விவசாயத்தை வளப்படுத்திய வரலாறு நம்முடையது. விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ள நாட்டில் விவசாயம் பற்றிய புரிதலும் அது சார்ந்த அறிவியல் ரீதியான அணுகுமுறைகளும் சிறப்பாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அப்படி வழிவழியாக விவசாயம் பார்த்துவந்த நமது விவசாயிகள், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீருக்காகப் படாத பாடுபடுகின்றனர். பாசனத்துக்கு நீரின்றி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படியொரு நிலையில்தான் மாற்றத்துக்கான சாவியைக் கையில் எடுத்திருக்கிறார் ரங்கநாயகி. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த இவர், விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

1954 ம் ஆண்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகா வடமூர் கிராமத்தில் பிறந்தவர் ரங்கநாயகி. மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் தான் மூத்தவர். எனவே, பொறுப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் பஞ்சமில்லை. இவரது கிராமத்தில் பள்ளிக்கூட வசதி இல்லாததால், ரங்கநாயகி திண்ணைப் பள்ளியில் படித்தார். பெண் பிள்ளைக்கு படிப்பெதற்கு என்பவர்களின் மத்தியில் போராடி ஏழாம் வகுப்பு வரை படித்தார். ஆனால், அதற்கு மேல் படிப்பதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. படிப்பில் சுட்டியான ரங்கநாயகிக்கு மேற்படிப்பு கனவு கைகூடவில்லை.

படிப்பை நிறுத்தியவர்கள் அடுத்த சில வருடங்கள் கழிந்ததும், சொந்த தாய்மாமாவிற்கே ரங்கநாயகியை திருமணம் செய்து வைத்தனர். 1970-ல் இவர்களது திருமணம் நடைபெற்றது. அப்போது ரங்கநாயகிக்கு வயது 16. அவரது கணவர் சுந்தர்ராமனுக்கோ வயது 32. பெற்றோரின் கட்டாயத்தால் தன்னைப் போல் இருமடங்கு வயதுள்ளவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார் அவர்.

“திருமணமாகி மூன்று ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லை. பின் முதல் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்து இறந்து போனது. அதனைத் தொடர்ந்து இரண்டு பெண்கள், ஒரு பையன் பிறந்தான். என் கணவர் சினிமா ஆப்பரேட்டராக வேலை பார்த்தார். இதனால் பண்ரூட்டியில் 20 ஆண்டுகள் வாழ்ந்தோம். தொடர்ந்து கார்பன் கலந்த காற்றைச் சுவாசித்ததால், புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான என் கணவர் கடந்த 2000-ம் ஆண்டு காலமானார். இதனால் நான் மீண்டும் வடமூர் கிராமத்திற்கு திரும்பினேன்,” என தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறார் ரங்கநாயகி.

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என மிகவும் கட்டுப்பாடுகள் கொண்டது ரங்கநாயகியின் குடும்பம். எனவே, கணவரை இழந்து வீடு திரும்பிய ரங்கநாயகிக்கு தனது நிலத்தில் ஒரு பகுதியைக் கொடுத்த அவரது அப்பா, அதை விற்று அந்தப் பணத்தில் எதிர்காலத்திற்கு திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். ஆனால், சோறு போடும் நிலத்தை விற்க ரங்கநாயகிக்கு மனம் வரவில்லை. எனவே, அந்த நிலத்தில் தானே விவசாயம் செய்யப் போவதாக அவர் அப்பாவிடம் தெரிவித்தார்.

கரம்பை நிலமான அதில் என்ன விவசாயம் செய்து எப்படி ரங்கநாயகி பிழைக்க முடியும் என அவரது அப்பாவிற்கு சந்தேகமாக இருந்தது. ஆனாலும் விவசாயமே அவரது குடும்பத்தொழில் என்பதால், அது எப்படியும் தனது மகளையும் காப்பாற்றும் என அவர், ரங்கநாயகிக்கு தன்னம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார். எப்படியும் விவசாயம் தான் தனது எதிர்காலம் என உணர்ந்த ரங்கநாயகி, அதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

“அப்போது தான் எனது கிராமத்தில் இருந்த தண்ணீர்ப் பஞ்சம் பற்றி எனக்குத் தெரிந்தது. போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் படும் வேதனையும் புரிந்தது. உடனடியாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வேலைகளில் இறங்கினேன்,” என்றார். “தண்ணீர் தான் பெரிய பிரச்சினை, வாய்க்கால்கள் சுத்தமாக இல்லாததே அதற்குக் காரணம் எனத் தெரிய வந்ததும், அது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றேன். எங்கள் ஊரின் பிரச்சினை குறித்து மனுவாக எழுதி, மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க சென்றேன். ஆனால், அவரை நேரில் சந்திக்க இயலவில்லை. எனவே, அங்கிருந்த அதிகாரிகளிடம் எனது மனுவை அளித்து விட்டு ஊர் திரும்பினேன். ஆனால். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் பிரச்சினையை நாங்கள் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும், யாரையும் நம்பக்கூடாது என்ற தீர்க்கமான முடிவை அப்போது தான் எடுத்தேன்,” என சாதாரண ரங்கநாயகி, ராதா வாய்க்கால் ரங்கநாயகி ஆன கதையைக் கூறுகிறார் ரங்கநாயகி. இதற்கிடையே வாய்க்கால் தண்ணீர் இணைப்பு தொடர்பான பணிகள் அவ்வூரில் நடந்துள்ளது. இதில் பணியாற்றியவர்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார் ரங்கநாயகி. இதனால் எப்படியும் தங்கள் ஊருக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்து விடும் என அவர் நம்பினார். ஆனால், அவரது அவரது கனவு பொய்த்துப் போனது. தேர்தல் வந்ததால், வாய்க்கால் இணைப்புப் பணிகளை அப்படியே கிடப்பில் போட்டது அரசு. எனவே, மீண்டும் தன் போராட்டத்தை தொடங்கினார் ரங்கநாயகி. இம்முறை அவர் அரசின் உதவிக்காக காத்திருக்கவில்லை. தன் சொந்தக் காசில் சுமார் 9.5 கிமீ தூரத்தில் சாலை அமைத்தார். இதனால், அவரோடு சேர்ந்து அவ்வூர் மக்களும் பயன் பெற்றனர். இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், ரங்கநாயகியை நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது தங்கள் ஊரின் பிரச்சினை குறித்து மாவட்ட
ஆட்சியாளரிடம் அவர் விளக்கினார்.

தனது நிலம் மட்டுமல்ல, வடம்பூர் பகுதியில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்துக்கும் தேவையான தண்ணீர் தர வேண்டிய ராதா வாய்க்கால் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். “வடம்பூர் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் 9.5 கிமீ தொலைவில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து, ராதா வாய்க்கால் மூலமாகவே வரமுடியும். எனவே, அதன்ஆக்கிரமிப்புகளை நீக்கி, மீண்டும் அந்த வாய்க்காலை மீட்டெடுப்பது என முடிவு செய்தேன்.

சுமார் 10 கிமீ நீளமிருந்த ராதா வாய்க்காலில் பல்வேறு ஆக்கிரமிப்புகள். ஒருபுறம் கழிவு நீர், மற்றொரு புறம் சுகாதார நிலையங்களில் இருந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள். இதனால் அந்த வாய்க்கால் எப்போதும் துர்நாற்றம் வீசும் ஒன்றாக மாறிப் போய் இருந்தது. நன்மை தர வேண்டிய அந்த வாய்க்காலால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. எப்படியும் அதை சீரமைத்து விடுவது என நான் போராடத் தொடங்கினேன்,” என்கிறார் ரங்கநாயகி.

ரங்கநாயகியின் முயற்சிக்கு அக்கிராம மக்களும், அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னூவும் பெரும் உதவியாக இருந்தனர். அவர்களின் உதவியோடு பல்வேறு தடைகளைத் தாண்டி, ராதா கால்வாயை ரங்கநாயகி சுத்தம் செய்தார். அதன் விளைவாக நீண்ட காலமாக ஆக்கிரமிப்புகளால் சீரழிந்து போயிருந்த ராதா கால்வாய் சுத்தமானது. அதில் தங்கு தடையின்றி தண்ணீரும் வரத்தொடங்கியது.

எதிர் வந்த தடைகளை தவிடு பொடியாக்கி, தன் நோக்கத்தில் வெற்றி கண்ட ரங்கநாயகியை கடலூர் மாவட்ட வேளாண் அலுவலர்களும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும், ‘ராதா கால்வாய் ரங்கநாயகி’ என்றே அழைக்கத் தொடங்கினர். களத்து மேட்டில் நின்று தனி ஒரு பெண்ணாக ரங்கநாயகி விவசாயம் பார்ப்பதை, தண்ணீருக்காக போராடியதை ஏளனம் செய்தவர்கள் எல்லாம், தற்போது அவரது
உதவியால் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

“விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன். விவசாயம் நஷ்டமான தொழில் என ஒருபோதும் நான் கூறமாட்டேன். பொன் விளையும் பூமியைக் குறை சொல்வது பெண்ணைக் குறை சொல்வதற்குச் சமம். இயற்கை விவசாயத்தை ஒதுக்கிவைத்துவிட்டுக் களைக் கொல்லி, பூச்சிக் கொல்லி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பூமியைப் பாழ்படுத்தியது நாம்தான். எல்லாவற்றுக்கும் மூலாதாரம் விவசாயம்.

அப்படிப்பட்ட நிலத்தை விற்கப் போகிறேன் என்று யாராவது சொல்வதைக் கேட்பதைவிட வேறென்ன துயரம் இருக்கிறது?” என்கிறார் ரங்கநாயகி. ரங்கநாயகியின் விவசாய ஈடுபாட்டைப் பாராட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை 2010-ம் ஆண்டு விருது வழங்கிக் கவுரவித்துள்ளது. தற்போதும் தொடர்ந்து மாதாமாதம் மாவட்ட ஆட்சியாளர் நடத்தும் அதிகாரிகள் சந்திப்பில் ரங்கநாயகி கலந்து கொள்கிறார்.

தண்ணீருக்காக மட்டுமின்றி மக்களின் நலனில் அக்கறை கொண்டு மேலும் பல போராட்டங்களிலும் அவர் பங்கேற்று வருகிறார். கருவேல மரங்கள் ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி
வருகிறார்.

கடந்த 25 வருடங்களாக தனது நிலத்தில் இயற்கை முறையில் மட்டுமே அவர் விவசாயம் செய்து வருகிறார். கணவர் மற்றும் மூத்த மகள் புற்றுநோயால் உயிரிழந்ததால், பூச்சிக்

கொல்லி மருந்தை தனது நிலத்தில் பயன்படுத்துவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அதோடு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை 35ம் மேற்பட்டோருக்கு தனியாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் மாப்பிள்ளை சம்பா, சீரகச்சம்பா போன்றவற்றின் இயற்கை விதைகளை அவர் இலவசமாக வழங்கியுள்ளார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ரங்கநாயகி தற்போது வகித்து வரும் பதவிகள் ஏராளம். வீராணம் ஏரி ராதா கால்வாய் பாசனச் சங்கத்தலைவி, கடலூர் மாவட்டம் உழவர் மன்ற செயற்குழு உறுப்பினர் என ரங்கநாயகியின் பங்களிப்பு பல இடங்களில் உள்ளது.

பிரதிபலன் பாராமல், தன் சொந்த செலவிலேயே இத்தகைய உதவிகளை ரங்கநாயகி செய்து வருகிறார். இப்போதும் வெளியூரில் மீட்டிங்குகளுக்குச் செல்லும்போது, மற்றவர்களை எதிர்பார்க்காமல் தன் சொந்த செலவிலேயே சென்று வருகிறார். தன்னால் முடிந்தளவு நலத்திட்டங்கள் குறித்து படிப்பறிவில்லாத ஏழை எளிய விவசாயிகளுக்கு எடுத்துரைக்கிறார்.

தொடர்ந்து சமூக நலனில் அக்கறை கொண்டு உழைத்து வரும் ரங்கநாயகிக்கு, திருமணமாகாத மாற்றுத்திறனாளி மகள் ஒருவர் வீட்டில் இருக்கிறார். அதோடு புற்றுநோயால் உயிரிழந்த தனது மூத்த மகளின் மூன்று பிள்ளைகளையும் ரங்கநாயகியே படிக்க வைத்து பார்த்துக் கொள்கிறார். ஊரைப் போலவே வீட்டிலும் ரங்கநாயகிக்கு கடமைகள் ஏராளமாக உள்ளது. ஆனால், இரண்டையும் கவனித்து இன்றளவும் சுறுசுறுப்பாக தன்னால் இயன்ற அளவிற்கு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார் ரங்கநாயகி. “விவசாயத்தை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது விவசாயம். விவசாயத்துக்கு முன்னோடி நாம் என்பதில் பெருமை கொள்வோம்” என்கிறார் ரங்கநாயகி.

– டேனியல்