ஒரே ஆண்டில் உருவான (அடர்) நந்தவனம்

செய்திகள் விவசாயம்

– ஜேடன்

ஒரே வருடத்தில் ஒரு வனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 60 வகையிலான இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடங்கிய வனம். வெறும் பதினெட்டு செண்ட் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அடர்வனம் இது.

அகிரா மியவாக்கி என்னும் ஜப்பானிய நிபுணர் கண்டறிந்த மரவளர்ப்பு முறை இது. விதவிதமான மரங்களை வெகு நெருக்கமாக நட்டு வளர்க்கிறார்கள். தாவரங்கள் சற்றே வளர்ந்த பிறகு மனிதர்களாலேயே உள்ளே நுழைய முடியாதபடியான நெருக்கம். பறவைகளுக்கும், அணில், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவைகளுக்குமான வனமாக அது மாறிவிடும். விதைகள் திரும்பத் திரும்ப வனத்துக்குள் விழுந்து முளைக்கும் போது வனத்தின் நெருக்கம் பெருகிக் கொண்டேயிருக்கும்.

பொதுவாக, செடிகளை இடைவெளி விட்டு நட்டு அவற்றை ஆடு மாடுகள் மேய்ந்துவிடாமல் பார்த்து, மனிதர்கள் முறித்துவிடாமல் காத்து என சகல பிரயத்தனங்களையும் செய்து காப்பாற்றப்படும் மரங்களின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவு. அடர்வனத்தில் ஆரம்ப முதலீடு சற்றே அதிகம் என்றாலும் தப்பித்து மேலே எழும்பக் கூடிய மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

அடர்வனம் ஒன்றை திருப்பூர் மாவட்டம் குள்ளே கவுண்டன் புதூர் என்ற ஊரில் செயல்படுத்தியிருக்கிறார்கள். அவிநாசியிலிருந்து கோவை செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. பதினெட்டு சென்ட் இடத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து இருநூறு மரங்கள். சற்றேறக்குறைய அறுபது வகையான மரங்கள் இவை. சரியாகத் திட்டமிட்டு ஒவ்வொரு வகை மரத்தையும் கலந்து வைத்திருக்கிறார்கள். பதினெட்டு செண்ட் இடத்துக்கும் கம்பிவேலி உண்டு. அதனால் விலங்குகள் நுழைவதில்லை. உள்ளூர் மக்கள் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள் என்பதால் அவர்களும் வனத்துக்குள் நுழைவதில்லை. அடர்வனம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஐம்பது செடிகள் பட்டுப் போய்விட்டன. ஆனாலும் இரண்டாயிரத்து நூறுக்கும் அதிகமான செடிகள் உயிர்பிடித்திருக்கின்றன.

ஒரு வனம் உருவாகிக் கொண்டிருப்பதை நேரடியாகப் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். கடந்த வருடம் அடர்வனத்தில் செடிகள் நட்டப்பட்டவுடன் பார்த்துவிட்டு வந்தோம். அப்பொழுது பெரிய நம்பிக்கையில்லை. ‘ஐம்பது சதவீத மரங்கள் தப்பித்தாலே பெரிய விஷயம்’ என்று கூட நினைத்தேன். ஆனால் தொண்ணூற்றைந்து சதவீதத்துக்கும் அதிகமான மரங்கள் பெரிதாகியிருக்கின்றன. இளைஞர்களின் உழைப்பும் உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்பும் இல்லையென்றால் சாத்தியமேயில்லை. வளர்ந்த மரங்களைப் பார்த்த போது நம்ப முடியாத மகிழ்ச்சி எங்களுக்கு. அடர்வனத்துக்கு அருகாமையிலேயே குளம் ஒன்றிருக்கிறது. மழை நீர் தேங்கி நிற்கும் அந்தக் குளத்தில் பறவைகள் அமர்ந்திருந்தன. பாம்புகளும் அணில்களும் வனத்துக்குள் உலவுகின்றன. பறவைகள் சில அதே அடர்வனத்தில் கூடு கட்டியிருக்கின்றன. இன்னமும் மரங்கள் முழுமையாக வளரும் போது நிறையப் பறவைகள் இந்த வனத்துக்குக் குடி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தங்கள் பகுதிகளில் மரம் வளர்க்க முயற்சிக்கும் இளைஞர்கள் இத்தகைய வனங்களைப் பற்றி யோசிக்கலாம்.

முதலில் மண்ணை வளப்படுத்துகிறார்கள். ஒன்றரை அடி குழி தோண்டி மண்ணோடு இயற்கை உரங்களைக் கலந்து மீண்டும் அந்தக் குழியை நிரப்பி செடிகளை நட்டுவிடுகிறார்கள். ஏற்கனவே சொன்னது போல நிலத்தைப் பாதுகாக்க கம்பிவேலி அமைக்கிறார்கள். முதல் ஒரு வருடத்திற்கு சீரான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டியிருக்கும். சொட்டு நீர் பாசனம் அமைக்க வாய்ப்பிருப்பவர்கள் அதைச் செய்யலாம். இதைத் தவிர பெரிய பராமரிப்பு எதுவுமில்லை. ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் வனம் தானாகவே பிழைத்துக் கொள்ளும். உதிரும் இலைகளே அவற்றுக்கான உரம். அதன் நிழலே மழை ஈரத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளும். வனத்தில் விளையும் கனிகள் பறவைகளை ஈர்ப்பதற்கான வழி. பறவைகள் பறக்கும் இடங்களுக்கெல்லாம் இங்கேயிருந்து விதைகளை எடுத்துச் செல்கின்றன. இப்படி சூழலியலின் இன்னொரு அங்கமாக இந்த வனம் மாறிவிடுகிறது.

குள்ளே கவுண்டன் புதூரில் இதனைச் சோதனை முயற்சியாகத்தான் தொடங்கியிருக்கிறார்கள். திட்டத்துக்கு நிறையப் பேர் உதவியிருக்கிறார்கள். இந்த அடர்வனத்தின் வெற்றி அக்கம்பக்கத்தில் இன்னமும் பல அடர்வனங்களை உருவாக்கக் கூடும். சங்கிலி போல பல இடங்களிலும் அடர்வனம் அமைக்கப்படும் போது அதன் விளைவுகள் இன்னமும் நிறையப் பலன்களை உருவாக்கும். அடர்வனம் குறித்து நிறையப் பேர் விசாரிப்பதாக உள்ளூர் இளைஞர்கள் சொன்னார்கள். இத்தகைய செய்திகள் பரவலான ஊடகக் கவனம் பெறுமானால் மேலும் பல ஊர்களில் அடர்வனம் குறித்தான எண்ணங்கள் உருவாகக் கூடும்.

வாட்ஸப், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களில் பரவலானால் இந்த அடர்வனத்தின் வெற்றி பரவலாகத் தெரிய வரும். மரம் நடுதல், பசுமை உருவாக்கம் ஆகியவற்றில் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்னும் சிறப்பு .

அட்டகாசப்படுத்தியிருக்கும் இளரத்தங்களுக்கு என்ஆர்ஐ தமிழ் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.