தமிழ் வளர்க்க ஆண்டுதோறும் ரூபாய் ஐந்து கோடி!!

செய்திகள்

-பிரியங்கா மோகனவேல்
டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு தமிழக அரசு ரூபாய் ஒரு கோடி வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நமது தாய்மொழி செம்மொழி தமிழை வளர்க்கும் பொருட்டு ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
கனடா நாட்டிலுள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாமல் தமிழ் மொழி வழக்கிலுள்ள வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக ஆண்டுதோறும் ரூபாய் 5 கோடி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கனடா நாட்டிலுள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக அரசின் சார்பாக ரூபாய் ஒரு கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். “இந்த இருக்கை ஏற்படுத்தப்பட்டால் அது டொராண்டோ பல்கலைக்கழகத்தின் முதல் சமூக நிதி இருக்கையாக இருக்கும் என அதன் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விருக்கையை அமைக்க மூன்று மில்லியன் டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 22 கோடி) தேவைப்படும் எனவும் இதில் 1.04 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக பெறப்பட்டு உள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகை தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதார திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு இந்த ஆணை மூலம் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவில் உள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் பிற நாடுகள் மற்றும் மாநிலங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதே போல் இந்தியாவுக்கு வெளியே முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் இருக்கை இருக்கிறது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை கொண்டுவரத் தமிழக அரசு 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ தமிழ் திரையுலகினர் பலரும் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தமிழ் இருக்கைகள் நம் உயர்தனிச்செம்மொழியான தமிழ் மொழியை மேலும் சிறப்பிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.!!