பொய்க்கால் குதிரை ஆட்டம்

கலை / கலாச்சாரம்
business directory in tamil

பொய்க்கால் குதிரைக் கூட்டை சுமந்து மரக்காலில் ஆடும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இது ஒரிஸ்ஸாவில் “சைத்திகோடா” என்றும், ஆந்திராவில் “தில்லு குர்ரம்” என்றும், ராஜஸ்தானில் “கச்சி கோடி” என்றும், கேரளத்தில் “குதிரைக் களி” என்றும் பெயர் பெற்றுஇருக்கிறது .

வரலாறு:-
தஞ்சையில் ஆட்சி செய்த சரபோஜன் என்னும் மராட்டிய மன்னன் குதிரை ஆட்டம், மயில் ஆட்டம், மானாட்டம், உள்ளிட்ட பல ஆட்டக்கலைகளை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினார். பிறகு கலைகள் மேல் அலாதி பிரியம் கொண்ட மன்னன் குலோத்துங்கசோழன் தனது அரண்மனையில் சதுரங்க ஆட்டம் என்று அழைக்கப்பட்ட பாரதக்கலைக்கு இணையாக தானே குதிரை அணிந்து மன்னர் வேடத்துடன் பொய்க்கால் நடனம் ஆடியுள்ளார். ஆதலால் அவர் “துரக வித்யா விநோதன்” ‘துரக-குதிரை’ என புலவர்களால் அழைக்கப்பட்டார் என்று கூறுகிறது தஞ்சை அரசு கல்வெட்டுகள்.

பொய்க்கால் குதிரை உருவானக் கதை:-
ஒரு போர்க்களத்தில் மன்னன் கரிகால சோழனின் கால்கள் தீக்காயம் மூண்ட நிலையில் , தொடர்ந்து போர் புரிய அவர் தனது கால்களில் மரக்காலை இணைத்து கட்டி போர் புரிந்து வெற்றிகொண்டார். அக்காலகட்டத்தில் பெயர் பெற்று விளங்கிய நாடகக் கலைஞர் திரு.ராமகிருஷ்ண நாயுடு குதிரை ஆட்டத்தை மரக்கால் அணிந்து , பொய்க்கால் குதிரை ஆட்டத்தை அரங்கேற்றியுள்ளார். இது மராட்டியர் வழி வந்த நடனம் ஆதலால் மராட்டிய பாரம்பரிய இசையான “கொந்தளம்” இசைக்கு முதலில் நடனமாடப்பட்டது.
காலச்சக்கரம் சுழல கலைகள் பல பரிமாணங்கள் எடுக்க துவங்கின. மங்கள வாத்தியமான தவில், நாதஸ்வரம் மற்றும் நையாண்டி மேளத்தை பக்கவாதமாக கொண்டு பொய்க்கால் குதிரை ஆடப்பட்டு வருகிறது. பொய்க்கால் குதிரை தனிக்கலையாகவும் , கரகாட்டம் உடன் இணைந்து துணை நடனமாகவும் தமிழகக் கோவில் திருவிழாக்களில் அரங்கேறுகிறது.

பொய்க்கால் குதிரை தயாரிக்கும் முறை மற்றும் கலைஞர்களின் ஒப்பனை:-
இக்கலைக்குரிய குதிரை, இந்த ஆட்டத்தில் முதன்மை பொருளாகக் கருதப்படுகிறது. குதிரையின் அழகும், வாளிப்பும், ஆடுபவரின் ஒப்பனையும் மிக முக்கியமாகும்.

முதலில் குதிரைக் கூட்டை தயார் செய்ய மண் குதிரை மாதிரி ஒன்றைத் தயார் செய்துக் கொள்வர். இந்த மண் குதிரை களிமண், ஆற்றுமணல் சேர்த்த கலவையால் ஆனது. இந்த மண் மாதிரிக் குதிரை நன்றாக உலர்ந்த பின்புதான் காகிதக் குதிரையைத் தயார் செய்யத் தொடங்குவர். முதலில் இந்த மண் மாதிரிக் குதிரையின் மீது தண்ணீரில் நனைந்த செய்தித்தாளை ஒட்டுவர். மண் மாதிரிக்குதிரையின் எல்லாப் பகுதிகளிலும் ஒட்டிய பின்பு பசை தடவிய செய்தித்தாளை ஒட்டுவர். இப்பசை வஜ்ரம், மயில்துத்தம் , கிழங்கு மாவு ஆகிய மூன்றையும் கலந்து காய்ச்சித் தயாரிக்கப்படுகிறது. இதன் பிறகு குதிரையை வெயிலில் உலர வைப்பர்.
பின் பசை தடவிய காடாத் துணி, செய்தித்தாள் ஆகியவற்றை ஒட்டுவர். இந்தக் கூடு உலர்ந்த பின் காகிதக் குதிரையை நெடுவாக்கில் இரண்டாக வெட்டிப் பிரித்துக்கொள்வர். இந்தக் கூட்டை மறுபடியும் நூலால் தைத்து இணைத்து, கூட்டின் நடுவில் சமசதுரத் துவாரம் இருக்கும்படி குதிரைக் கூட்டை தயார் செய்வர். இதன் பின் குதிரைக் கூட்டின் மேல் வெள்ளை நிறச்சாயம் அடிக்கப்படும், வண்ணக் கண்ணாடி துண்டுகள், ஜிகினா காகிதங்கள் ஆகியன ஒட்டப்படும். குதிரையின் கீழ்ப்பகுதியில் வண்ணத் துணி தொங்க விடப்படும். குதிரை பெரும்பாலும் 25 முதல் 30 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆட்டக்காரர் காலில் கட்டும் கட்டை ஆலம் விழுதால் செய்யப்படும். இதில் பாதம் வைக்கும் பகுதி மாமரத்தாலோ, தேக்கு மரத்தாலோ இருக்கும்.

ஆட்டக்காரர் குதிரைக் கூட்டுப் பொக்கு வழியாகத் தலையை நுழைத்து குதிரைப் பொக்குப் பகுதியில் இணைக்கப்பட்ட நீண்ட துணிக் கயிற்றைத் தோளில் மாட்டிக் கொள்வர். பொய்க்கால் குதிரை பெரும்பாலும் இரு ஆட்டக்காரர்கள் ஆடுகின்றனர். இவர்கள் ராஜா , ராணி கதாபாத்திரம் போல் வேடம் அணிந்து, ஒப்பனை செய்து நடனம் புரிவர்.

கலை வளர்ப்போம் காலம் தாண்டி நிற்போம்:-
நமது கிராமியக் கலைகளை பாதுகாக்க நமது தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு நாட்டுப்புற கலைகளை அரசு பாடத்திட்டத்தில் கொண்டு வந்தனர். தற்போது பொய்க்கால் குதிரை தமிழகத்தில் மதுரை,திருச்சி,பண்ரூட்டி போன்ற ஒரு சில மாவட்டங்களில் தான் அரங்கேறுகிறது.

இக்கட்டுரையை எழுதும் நான் மேட்டுக்குடி பெண்ணாக இருந்தாலும் நமது கிராமியக்கலைகள் மீது கொண்ட அலாதி பிரியத்தினால் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல கலைகளை எனது குரு திரு. மதுரை முது மற்றும் திரு.லஷ்மணன் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். தாயகம் தாண்டி தொலைவில் வாழும் தமிழர்களாகிய நாம் மனது வைத்தால் இப்பாரம்பரியம் பட்டுபோகாமல் காக்கலாம். அமெரிக்காவில் நமது நாட்டுப்புற கலைகளை காக்கவும்,வளர்க்கவும் ஒரு கலைக்கூடம் அமைத்து வருங்கால சந்ததியினருக்கு இக்கலைகளை பயிற்றுவிப்பதே எனது நோக்கம் ஆகும்.

ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக ஒருங்கிணைந்த நாம், நம் தமிழ் பாரம்பரிய கலைகளைக் காக்கவும் கைக் கோர்க்க வேண்டும்.