மெக்சிகோ சுவர்

செய்திகள் வட அமெரிக்கா

– சிவ சித்ரா

உலகெங்கும் இனம், மொழி என எவ்வளவு வேறுபாடுகள் இருந்த பொழுதும் பொதுவாக இருக்கும்
விடயம், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சினை. முடியாட்சியில் இருந்து
மக்களாட்சிக்கு மாறிய காலகட்டத்தில், நாடுகளின் வரைபடங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
அதில், மொழியால், இனத்தால், ஒன்றுபட்ட மக்களை, திருத்தப்பட்ட எல்லைக்கோடுகள் பிரித்தன.
பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக இருந்த மக்களை புதிய சட்டங்கள் மூலம் மட்டுமே பிரிப்பது
எளிதான காரியம் இல்லை. அத்துடன் மதம், பொருளாதாரம், சமூக விரோத செயல்கள் என
தற்கால சிக்கல்களையும் சேர்த்துக் கொண்டால் ? அரசியல் செய்வதற்கு ஒரு கருப்பொருள். நாம்
தலைவர்களாகக் கருதும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அதைத்தான் உணர்த்துகின்றன.
“என்னால் ஆகச்சிறந்த சுவர்களை எழுப்ப முடியும். என்னை விட சிறப்பாக யாராலும்
சுவரெழுப்ப முடியாது. நம்புங்கள்! நமது நாட்டின் தெற்கு எல்லையில், குறைந்த செலவில்
சுவரெழுப்புவேன். அதற்கு மெக்சிகோ நாட்டை செலவு செய்ய வைப்பேன். குறித்து வளத்துக்கு
கொள்ளுங்கள். ” – தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் அவர்கள் பேசிய வார்த்தைகள். அவரது
ஆதரவாளர்களின் வரவேற்பை இவ்வார்த்தைகள் பெற்று விட்டதால் உற்சாகமடைந்த ட்ரம்ப்,
பின்பு இந்த யோசனையை ஒரு கவர்ச்சிகர முழக்கமாக எழுப்ப பத் தொடங்கினார்.
அமெரிக்காவின் தெற்கு எல்லையின் நிலை என்ன ? ஒரு விரிவான அலசல் .

எல்லை பாதுகாப்பு :
அமெரிக்காவின் தெற்கு எல்லையை பாதுகாக்க வேண்டும். கண்காணிப்பை பலப்படுத்த
வேண்டும் என்ற செயல்திட்டம் நீண்ட காலமாகவே அமெரிக்க அரசுக்கு உண்டு. ஆனால்
திரு.ட்ரம்ப் அளவிற்கு அதனை யாரும் முன்னிறுத்தியதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் உலகின்
பல்வேறு நாடுகளிலும் வலதுசாரி சிந்தனைகள் வலுப்பெற்று வருகின்றன. வலதுசாரி கட்சிகள்
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. அதற்கு, ‘பெரியண்ணன்’ அமெரிக்காவும்
விதிவிலக்கல்ல. தீவிர வலதுசாரி கொள்கைகளின் ஒரு வடிவம் தான் இந்த எல்லைச் சுவர்.
எதற்காக இந்த சுவர் ? சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதை பொருள் கடத்தலைத்
தடுப்பதற்காக என்பது பொதுவாக சொல்லப்படும் காரணங்கள்.

உலகெங்கும் உள்ள பல படித்த இளைஞர்களின் கனவு தேசம் அமெரிக்கா.
அவ்வாறு இருக்கையில், அண்டை நாட்டு மக்கள் வேலை வாய்ப்பு காரணங்களுக்காக
அமெரிக்காவை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவ்வாறு வரும் மக்கள்,
அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் பொழுதுதான் மக்களிடையே
பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது.

அமெரிக்கா – மெக்சிகோ எல்லை பகுதி என்ற உடனே, போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
மற்றும் ஆயுதம் தாங்கிய வன்முறையாளர்கள் நிறைந்த பகுதி என்ற பிம்பம் பலருக்கும் உண்டு.
ஏறத்தாழ 2650 மைல் நீளமுள்ள இந்த எல்லைப்பகுதி, டெக்ஸாஸ்,நியூ மெக்சிகோ, அரிசோனா ,
கலிஃபோர்னியா ஆகிய நான்கு மாகாணங்களை உள்ளடக்கியது.

அமெரிக்கா – மெக்சிகோ எல்லை வரலாறு
1846 ஆம் ஆண்டுக்கு முன், கலிஃபோர்னியா, அரிசோனா, நியூ மெக்சிகோ, நெவாடா,
யுடா, டெக்சாஸ் மற்றும் வயோமிங், கொலராடோ மெக்சிகோ மாகாணங்களின் ஒரு பகுதி
ஆகியவை மெக்சிகோ நாட்டின் வடபகுதியாக இருந்தவையே. 1848 ஆம் ஆண்டு, போருக்குப்
பின்னான குவாடலூப் ஹிடால்கோ உடன்படிக்கையின் படி மேற்கூறிய நிலப்பரப்புகள் யாவும்
அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டன. இவற்றுள் டெக்சாஸ், மெக்சிகோவின் பகுதியாக
இருந்து பின்பு தனி நாடாக பிரிந்திருந்தது. பல்வேறு உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளுக்குப்
பின், டெக்சாஸ் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
இது தவிர மத்திய அமெரிக்க நாடுகளுடன் பல போர்களில் அமெரிக்கா ஈடுபட்டது.
அந்நாடுகளின் உள்நாட்டுக் கலகங்களிலும் அமெரிக்காவின் பங்கு, எதோ ஒரு விதத்தில் இருந்தே
வந்துள்ளது.

இன்றைய நிலை
இன்றைய அமெரிக்க மெக்சிகோ எல்லை பகுதி, வாகனங்கள் தடுப்பு, பாதசாரிகள் தடுப்பு
மற்றும் தடுப்புகளற்ற வெளி என்று ஒரு கலவையான எல்லைப் பகுதியாக உள்ளது. டெக்சாஸ்
மாகாணத்தில் மெக்சிகோ வளைகுடா பகுதியில் தொடங்கும் எல்லைப்பகுதியானது, எந்தவித
தடுப்புகளும் தீவிர கண்காணிப்பும் இன்றிதான் இருக்கிறது. ரியோ கிராண்ட் ஆற்றுப்பகுதிதான்
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையின் நீளத்தில் பாதி வரை இருக்கிறது. எல்லையில்
மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் மட்டுமே எல்லை பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது என்கிறது
ஒரு அரசாங்க தகவல். அது கூட முழுமையான அரண் அல்ல. வாகனங்களைத் தடுக்கும்
விதத்திலான அரண் மட்டுமே. அதில் மனிதர்கள் நுழைய முடியும். மனிதர்களின் நடமாட்டத்தையும்
தடுக்கும் அரண் 350 மைல் மட்டுமே உள்ளது.

அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு படையின் கணக்கீட்டுப்படி, அமெரிக்காவுக்குள்
நுழைய முயற்சித்தவர்களின் எண்ணிக்கை 341,084. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தகவல் படி,
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 412. அமெரிக்க மெக்சிகோ
எல்லை பகுதியை சட்டவிரோதமாகக் கடக்க முற்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
என்கிறது ஐ.நா வின் ஒரு ஆய்வு.

எல்லைச் சுவர் எழுப்பப்படுவதற்கான மற்றொரு முக்கிய காரணி போதைப்பொருள்
கடத்தல். 2013 இல் அமெரிக்காவில் போதைப்பொருள் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்த லினால் மட்டுமே வருடத்திற்கு 70 பில்லியன் டாலர் வரை
அமெரிக்க அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது, என்கிறது அமெரிக்க அரசின் ஒரு
ஆய்வு.நார்க்கானமிக்ஸ் (Narconomics) என்ற புத்தகத்தை எழுதிய திரு. டாம் வைன்ரைட்
கூறும்பொழுது, போதைப்பொருள் சந்தையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கர்களே அதிகம் லாபம்
ஈட்டுகின்றனர் என்கிறார். ஏனெனில், இந்த வணிகச் சங்கிலியில், அதிக அபாயம் கடை நிலை
தரகர்களுக்கே. எனவே, அவர்கள் ஈட்டும் லாபமும் அதிகம் என்கிறார். போதைப்பொருள் கடத்தல்
விவகாரங்களில் கைது செய்யப்படுபவர்களில் 70 சதவிகிதம் அமெரிக்கர்களே.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பிற்காக அமெரிக்கா மிக அதிகமாக செலவழிக்கின்றது.
1990 இல் $262,647 என்ற அளவில் இருந்த இத்தொகை, தற்பொழுது வருடத்திற்கு நான்கு

பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கிறது. அரசாங்கம் எவ்வளவுதான் செலவழித்தாலும்,
போதைப்பொருள் சந்தை என்பது நாள்தோறும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மிகப்பெரும்
வணிகமாக உருவெடுத்திருக்கும் கடத்தலை சில அடி உயரமுள்ள சுவர் தடுத்துவிடுமா என்பது
பில்லியன் டாலர் கேள்வி.

சூழலியல் பார்வை
மனிதனை விட சுயநலமான ஒரு விலங்கினம் இந்த பூமியில் தற்பொழுது இல்லை.
அதிலும், உயர்ந்த சிந்தனைத் திறன் கொண்ட மனித இனம்தான் தன் சந்ததியினர் பற்றிக் கூட
யோசியாது, தான், என் என்ற அளவிலேயே நிற்கிறது. உலகெங்கிலும் உள்ள சூழலியலாளர்கள்
பல்வேறு திட்டங்களை எதிர்ப்பது கூட’காக்கை குருவி எங்கள் சாதி -நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’
என்ற உன்னதமான நோக்கோடு அல்ல. பல சூழலியல் பாதிப்புகள், இப்பூமியை மனித இனம்
வாழவே தகுதியற்ற வெளியாக மாற்றி விடும் என்பதால்தான். ஆனால் அதைக் கூட உணரத்
தயாராக இல்லை இன்றைய தலைவர்கள் (?!).

‘பயோ சயின்ஸ் ‘ என்னும் இதழில் மெக்சிகோ சுவரினால் ஏற்படக்கூடிய சூழலியல்
சிக்கலின் தீவிரத் தன்மை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. இம்முயற்சியில்
உலகெங்கிலும் உள்ள 2500 ஆராய்ச்சியாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அருகிவரும் தாவர
மற்றும் விலங்கினங்கள் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வாழ்விடங்கள்
துண்டாடப்படுவதால் பல்லுயிர்ச்சூழல் எவ்வாறு பாதிப்படையும் என்பதையும் ஆராய்ந்துள்ளனர்.
உயிரியல் ரீதியிலும், சமூகவியல் ரீதியிலும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அமெரிக்க
அரசாங்கம் அறியவில்லை. உயிர்களுக்கு ஆதாரமாக விளங்கும் சூழலியல் மீது எந்தக்
கவலையுமில்லாமல் வன்முறையை பிரயோகிக்கும் ஒரு அரசாங்கம் அமெரிக்காவில்
அமைந்துள்ளது என்று கடுமையாக சாடுகிறார், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த
உயிரியலாளர், பால் எல்ரிச்.

தீர்வு சாத்தியமா
மிக நீண்ட எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பது பல சிக்கல்கள் நிறைந்தது தான்.
நாடுகளின் எல்லைகள், பல சட்டவிரோதக் செயல்களின் முக்கிய களங்களாக இருக்கின்றன
என்பதையும் மறுக்க இயலாது. ஆனால், அதற்கு சுவர் தான் தீர்வா? போதைப்பொருள்
சந்தையானது ,உலக வர்த்தகத்தில் ஒரு சதவிகிதத்திற்கும் அதிகம். இது அரசியல், அதிகார
பங்களிப்பு இன்றி இயங்க முடியாது. சில நாட்களுக்கு முன்பு கூட அரிசோனா மாகாணத்தின்
எல்லைப்பகுதியில் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. 1990 ல்
இருந்து இதுவரை 200 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மின்தூக்கி வசதியுடன்
கூடிய சுரங்கப்பாதைகளையும் எல்லைப் பாதுகாப்புப் படை கண்டுபிடித்துள்ளது.
இந்த தருணத்தில், அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் நடைபெறும் இன்னொரு கடத்தல்
கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது. அது, அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு
நடைபெறும் ஆயுதக்கடத்தல். ஆம், மெக்சிகோவைவிட, அமெரிக்காவில் ஆயுதம் வாங்குவது
எளிது. மெக்சிகோவில் சட்டப்படி துப்பாக்கி வாங்குவது மிகவும் கடினம். ஒரே ஒரு விற்பனைக்கூடம் மட்டுமே உள்ளது. ஆனால், அமெரிக்கா முழுமைக்கும் 50,000 கடைகளில் துப்பாக்கி விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் வெறும் சுவர் என்பது ஒரு முழுமையான தீர்வாக இருக்குமா? நிச்சயம் இல்லை என்று திரு.டிரம்ப் உட்பட அனைவருக்கும் தெரியும். ‘ஹோம்லேண்ட் செக்யூரிட்டி’
அமைப்பின் அறிக்கையின் படி, 21.6 பில்லியன் டாலர் இந்தச் சுவருக்கான கட்டுமான செலவு.
ஆனால், அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ள தொகை, 1.6 பில்லியன் டாலர். அதுவும்
அதிபர் டிரம்ப் அவர்களின் திட்டத்திற்கான ஒப்புதல் அல், தற்போதைய ‘எல்லை வேலி’
அமைப்புக்கான விரிவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்புதலே.
கணினி மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருக்கும் நாடு, அதி
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிப்பை பலப்படுத்தும் என்பதுதான் அனைவரது
இயல்பான எதிர்பார்ப்பும். மேலும், உள்நாட்டு நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துதல்,
நிர்வாக சீரமைப்பு, நெகிழ்ந்து கொடுக்காத கடுமையான சட்டம், பாரபட்சமற்ற அணுகுமுறை என
பலதரப்பட்ட செயல்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் ஒருங்கிணைந்த திட்டமே தீர்வாக
அமையும்.

அதை விடுத்து நடக்காத ஒன்றை, நடந்ததாகக் கூறுவதும், உண்மைக்கு மாறான
தகவல்களை வெளியிடுவதுமாக ஒரு நாட்டின் அதிபர் செயல்படுவது, முதிர்ச்சியற்ற செயல்பாடே
ஆகும்.

உலகின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், வெற்றி பெற்றவரின் கூற்று கூற்று தான் உண்மை என்று
நிறுவப்பட்டுள்ளதைக் காண முடியும்.