ரம்ஜான் – இஸ்லாமியர்களின் உன்னத பெருவிழா

ஆன்மீகம்
business directory in tamil

‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாள் ‘ரம்ஜான் பண்டிகை‘, மற்றும் தியாகத் திருநாள் ‘பக்ரீத் பண்டிகை‘ என ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும், நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் திருக்குர் ஆன், இப்பூவுலகில் அருளப்பட்ட மாதம் என அனைத்தும் அருள் நிறைந்த மாதமாக இருப்பதால், சிற்சில காரணங்களுக்காக ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவதில்லை.

நம் வாழ்வில் அகமும்-புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சியாகவே இந்த நோன்பு அனுசரிக்கப்படுகிறது. சொர்க்கத்தில் ரய்யான் என்ற சொர்க்க வாசல் குரானில் உண்டு. ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு இருந்தவர்கள் மட்டுமே இந்த வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள் என்பது இஸ்லாம் மத நம்பிக்கை. இந்த ரமலான் மாதத்தில் பயிற்சி பெற்றவர்கள், அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பலன் அனுபவிப்பார்கள். அவர்கள் நேர்மை தவறும்பொழுது, இந்த ரமலான் மாதத்தில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறு எந்த நன்மையும் அவர்கள் செய்யவில்லை என்பது பொருளாகிவிடும்.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாத்தில் பின்பற்றப்படவேண்டிய கொள்கைகள். அப்படி இருக்கும்பொழுதுதான், மனது தூய்மையை நாடும் என்பது அதன் மறைபொருளாக இருக்கிறது. அதாவது அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது. இந்த மாதத்தில் நன்மைகள் செய்யாதவர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் இழந்தவர் என்றும், பாவமன்னிப்புக் கேட்காதவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு வெகு தொலைவில் இருப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

நோயின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் முதுமை உள்ளிட்ட பிற காரணங்களால் நோன்பினை அனுசரிக்க முடியாதவர்கள், ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும் என்று திருக்குர் ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.

சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தியாவில் சிறப்பு தொழுகைகளுடன்  ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மனித வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், கணக்கு இருக்கிறது. நாம் செய்யும் நன்மை தீமைகள், நம் இறப்பிற்குப் பிறகு நம்மை வந்து சேரும். அதனால் அல்லாஹ்வின் கட்டளைப்படி நாம் திருக்குர் ஆன் படி வாழ்ந்தால், நம்மிடையே மறுமலர்ச்சியை உருவாக்கி, ஆரோக்கியமான நல்ல சமுதாயத்தை உருவாக்கிவிடலாம் என்பது ஆழமான நம்பிக்கை.

பாக்ஸ்
சிறுவனின் உயிரை காக்க ரமலான் நோன்பை கைவிட்ட “மனிதநேய” இஸ்லாமியர்
பீகாரில் தலசீமியா நோயால் அவதிப்பட்ட சிறுவனின் உயிரை காக்க இஸ்லாமியர் ஒருவர் அம்மதத்தினர் புனிதமாக கருதப்படும் ரமலான் நோன்பை கைவிட்டார். கோபால்கஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.8 வயதான இவர் உடல் சோர்வாலும் சுகமின்மையாலும் சாதர் மருத்துவமனைக்கு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ராஜேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தலசீமியா என்ற நோய் உள்ளதாக கூறினர். இந்த நோய் ரத்தத்தில் ஹீமோகுளோபின் வளர்ச்சி அசாதாரணமாக உற்பத்தியாகும் போது ஏற்படும் ரத்த குறைபாடு நோயாகும். இதற்காக நோயாளி 3-4 வாரத்துக்கு ஒரு முறை ரத்தத்தை மாற்ற வேண்டும்.
தனக்கு தெரிந்த பெரும்பாலான ரத்த வங்கிகளில் ராஜேஷின் தந்தை ரத்தம் கேட்டார். ஆனால் சிறுவனின் ரத்தம் அரிய வகை என்பதால் அது கிடைக்கவில்லை. வேண்டுமானாலும் 2 அல்லது 3 நாட்களில் அந்த வகை ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தனர்.
சிறுவனின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால் ஓரிரு நாள் தாமதித்தால் கூட சிறுவனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படும் நிலை இருந்தது. இதையடுத்து மருத்துமனையிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ள குச்சாய்கோட் ரத்த வங்கிக்கும் சென்ற ராஜேஷின் தந்தை ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் மகனை காப்பாற்றி விடலாம் என்று கொஞ்ட நஞ்ச நம்பிக்கையும் குறைந்துவிட்டது.

இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர், மாவட்ட ரத்த தானக் குழுவின் உறுப்பினரான அன்வர் ஹூசைனுக்கு ராஜேஷின் நிலை குறித்து எடுத்துரைத்தார். அப்போது அன்வர் சிறிதும் தாமதிக்காமல் சிறுவனின் ரத்த வகையை உடைய தனது ரத்ததான குழுவின் மற்றொரு உறுப்பினராக ஜாவீத் ஆலமிடம் கேட்டார்.

இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு மிகவும் முக்கியமானதாகும். தங்கள் வாழ்வில் 5 முறை தொழுகையையும், ரமலான் நோன்பு இருப்பதையும் வாழ்நாள் கடமையாகவே கருதுகின்றனர். ரமலான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களின் ரத்தம் சிந்துவதோ வெளியேறுவதோ கூடாது. அப்படி செய்தால் நோன்பு முறிந்துவிடும் என்பதால் ஜாவீத் ஆலம் யோசித்தார்.எனினும் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது நோன்பை கைவிட்டுவிட்டு சிறிது உணவு எடுத்துக் கொண்டால் மட்டுமே அவரது ரத்தத்தை எடுப்போம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் நோன்பை கைவிட்டார். சிறுவனுக்கு ரத்தம் கொடுத்தார். இதனால் சிறுவன் உயிர் பிழைத்தார். நோன்பை விட மனிதநேயமே முக்கியம் என்று எங்கள் மதம் கூறுகிறது. அதனால் நோன்பை கைவிட்டதற்கு நான் வருந்தவில்லை என ஜாவீத் ஆலம் தெரிவித்தார்.