ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், அமைப்பு தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி 29 மற்றும் 30 தேதி என 3 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.
அதன்படி நடப்பு ஆண்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. பொதுவாக, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில், நாள்தோறும் பூஜைகள், மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்றன. இதில், இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் தேவர் நினைவிடத்தில் இன்று நேரில் மரியாதை செலுத்தினர். இதற்காக மதுரை ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை லாரி மற்றும் கனகர வாகனங்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.