ஏப்ரல் 16 ஆம் தேதி நவி மும்பையில் உள்ள கார்கரில் மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது 13 பேர் வெப்ப அலையால் உயிரிழ்ந்ததாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நவி மும்பையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர் வெப்ப அலை தாக்கம், நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் “இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செலவையும் மாநில அரசு ஏற்கும்” என்று அறிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் திரு. ஷிண்டே அவர்கள்.
பலி எண்ணிக்கை மேலும் உயரும் என, அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
ஆதாரங்களின்படி, கார்கரில் உள்ள 306 ஏக்கர் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர், அங்கு சமூக ஆர்வலர் தத்தாத்ரேய நாராயண் என்ற அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் மகாராஷ்டிர பூஷன் விருதை வழங்கினார்.
மேடையில் உள்ள உயரதிகாரிகள், ஊடக உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில விஐபிகளுக்கு மட்டும் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பான்மையான மக்கள் மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணம் செய்த பிறகு, நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வந்தடைந்து கொளுத்தும் வெயிலின் தாக்குதலை தாங்கி கொண்டு காத்திருக்க தொடங்கினர் எனவும் கூறப்படுகிறது.
நிகழ்வில் பங்குபெற்ற 120 க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இந்த இறப்புகளுக்கு பாஜக மற்றும் சிவசேனா ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்களுடைய கவனக்குறைவு தான் இவை அனைத்திற்கும் காரணம்” என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது