சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மற்றவை

ஆகஸ்ட் 15, 2021. உலகின் மாபெரும் ஜனநாயகமான இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை பெருமிதத்துடனும் பெருமையுடனும் கொண்டாடி வருகிறது. இருநூறு ஆண்டுகால அடிமை முறையை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி ஒழித்த வரலாற்று நிகழ்வுக்கான நினைவேந்தலாகவே ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கம் இந்த ஆண்டிற்கான சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு “நாடே முழுமுதல் எப்போதும் முழுமுதல்” என்னும் சாராம்சத்தை அறிவித்துள்ளது.

நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதைக் குறிக்கும் விதமாக தேசத் தலைநகரிலும், அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் கோலாகலக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போதிலும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில், கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள கொரோனா கொடுந்தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை தலைநகர் டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கொடியேற்றி வைத்து உரையாடுகிறார். ஒலிப்பிக்கில் கலந்து கொண்ட, பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் முன் பாரதப் பிரதம் கொடியேற்றி உரையாற்றுவது இந்த வருடத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.

வணிகம் என்னும் பெயரில் வந்த அந்நியக் கும்பல் நமக்கான உரிமைகளைப் பறித்து நம்மைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த அடிமை முறையைக் களைய, பாகுபாடுகளைக் களைந்து தேசமே கிளர்ந்து எழுந்தது. போராட்டத்தின் விளைவாக பல உயிர்களையும் இழக்க நேரிட்டது. பல தலைவர்கள் தோன்றினார்கள். இறுதியாக 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியா ஒரு சுதந்திரமான நாடாக அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினம் என்பது நம் போராட்ட குணத்துக்கான, நம் ஒற்றுமைக்கான ஒரு நினைவூட்டல். நமக்காக இறந்த உயிர்களுக்கும், புரியப்பட்ட தியாகங்களுக்கான ஒரு சிறு அங்கீகாரம். இப்படியாக நம் வரலாறு மற்றும் பாரம்பரியங்களை நினைவு கொள்ளும் தினமாக பெருமையுடன் கடைபிடித்துக் கொண்டாட வேண்டிய ஒரு தினத்தை, நாம் வெறும் விடுமுறை நாளாக மட்டும் கண்டு கடந்து செல்வது தான் வேதனையிலும் வேதனை. ஒவ்வொரு நாட்டிற்கும் தத்தமது வரலாறே பெருமை. நம் போராட்ட குணத்தையும், தியாக வரலாற்றையும் இன்றைய சமூகத்தினர் உணரும் வகையில் பெருமிதத்துடனும், பேரார்வத்துடனும் சுதந்திர தினத்தைப் போற்றிக் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.

அனைவருக்கும் NRI தமிழ் சார்பாக இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published.