மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. நாடு முழுவதும் பல லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். அதில் 60,000 மாணவர்கள் மட்டுமே வெற்றிப் பெற்றனர். தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் குறைந்து மற்ற மாநிலங்களை விட பின்தங்கி உள்ளது.
இதைவிட மற்றொரு தகவல் மிகவும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களில் 80% பேர் நீட் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். அதிலும் பலரது மதிப்பெண்கள் பூஜ்யத்திற்கும் கீழ் வந்திருப்பது பள்ளிக் கல்வித் துறைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.
எனினும் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளமுடியாமல் திணறுவது அனைவருக்கும் வருத்தமான செய்தியாகும். கடந்த 2020ம் ஆண்டு கிராமப் புற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் 7.5% உள்ஒதுக்கீடு கொடுத்து அவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும்படி செய்தது அன்றைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு. இருப்பினும் இந்த ஆண்டு எத்தனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கு இடங்கள் கிடைக்குமென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.