நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆராயும் இந்தியாவின் சந்திரயான் திட்டங்களின் மூன்றாம் அத்தியாயமான சந்திரயான் 3 வெற்றி பெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. சந்திரயான் திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த லேண்டர் தரையிறக்கம், அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
முந்தைய சந்திரயான் 2 திட்டத்தின் தோல்வி முகத்துக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின் தடுமாற்றமே காரணமானது. அந்த தோல்வியில் இருந்தே பாடங்கள் கற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் அதன் அடிப்படையில், வடிவமைத்த தொழில்நுட்பம் தற்போது விக்ரம் லேண்டரின் வெற்றிகர தரையிறங்கலை சாத்தியமாக்கி இருக்கிறது.
ஆக.23 மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டரின் தரையிறக்கத்துக்கு இஸ்ரோ நேரம் குறித்திருந்தது. இதனை முன்னிட்டு மாலை 5.20 முதலே நேரலையில் மக்கள் ஆர்வமாக குழுமியிருந்தனர். தொலைக்காட்சிகள், இஸ்ரோவின் சமூக வலைதளப் பக்கங்கள், ஊடகங்கள் உள்ளிட்டவை இந்த நேரலைகளை ஒளிபரப்பின. தேர்வு முடிவு வெளியாவது போல லேண்டரின் செங்குத்து தரையிறக்கம் மற்றும் அதன் ராக்கெட்டுகள் செயல்பட்ட விதம் உள்ளிட்டவை வெற்றிகரமான தொடக்கத்தை அளித்தன.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரலையில் மகிழ்ச்சி தெரிவித்தனர். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்தபடி ஆன்லைனில் இஸ்ரோ நிகழ்வுகளையும், விக்ரம் லேண்டர் தரையிறங்கலையும் பார்வையிட்டார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான் 3 வெற்றியை உறுதி செய்ததும், ஆன்லைன் வாயிலாக பிரதமர் மோடி வெற்றி உரை நிகழ்த்தினார்.
சர்வதேச அளவில் பிரபலங்களும், பொதுமக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
சந்திரயான் 3 வெற்றியை தொலைக்காட்சியில் பார்த்தபடி, தோனியின் மகள் ஷிவா கொண்டாடும் வீடியோ காட்சி இன்றைய தினத்தின் வைரல் வீடியோக்களில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது.
சந்திரயான் 3 திட்டத்தின் முத்தாய்ப்பாக, நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் சாகசகம் இன்று வெற்றிகரமாக அரங்கேறியது. இதன் மூலமாக சந்திரயான் திட்டத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பான இந்தக் காட்சியை கண்டுகளித்த இந்தியர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர்களின் பிரதிநிதியாக, ’தல’ தோனியின் மகள் மகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கலின் படிநிலைகளும், நிறைவாக அதன் வெற்றியும் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகின்றன. திக்…திக் விநாடிகளோடு காத்திருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் தவிப்பும், பின்னர் அவற்றைக் கடந்த அவர்களின் கொண்டாட்டமும், டிவி பார்க்கும் சிறுமியையும் தொற்றி இருக்கிறது. சந்திரயான் திட்டம் குறித்து பெரிதாய் விளங்கிக்கொள்ள வாய்ப்பில்லாத போதும் 7 வயது சிறுமியான ஷிவா, தேசத்தின் பெருமைமிகு தருணத்தை கொண்டாடிய விதமும், குதியாளம் போட்டு தனது மகிழ்வை வெளிப்படுத்தியதும் அந்த வீடியோவில் அழகாக பதிவாகி உள்ளது.
சாமானிய இந்தியர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில், சிறுமி ஷிவா மகிழ்வில் திளைத்திருந்ததை, அவரது தாயார் சாக்ஷி தோனி பதிவு செய்து பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார். சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியில் திளைத்திருக்கும் இந்தியர்கள், நாட்டின் மற்றுமொரு பெருமைமிகு அடையாளமான ’தல’ தோனியின் சார்பில், அவரது அன்பு மகள் வீடியோவை உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
