தமிழ் இசையமைப்பாளர்களுக்கு என்றுமே மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் ஹிந்தி இசை தமிழ் நாடெங்கும் ஆக்கிரமித்த நிலையில் மக்களின் இசை ஆர்வத்தை தமிழ் திரையிசைப் பக்கம் திருப்பியதற்கு தமிழ் இசையமைப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இணை, 70களின் பிற்பகுதியில் இளையராஜா, அதன்பின் 90களின் ஆரம்பத்தில் அறிமுகமான ரகுமான் என இவர்கள் அனைவரும் இசையுலகில் நீங்கா இடம் பிடித்துவிட்டனர். 1993ல் வெளியான “ரோஜா”(தமிழ்) திரைப்படத்தின் மூலம் அறிமாகமான ரகுமான் தன் முதல் படத்திலேயே வித்தியாசமான இசையால் மக்களைப் பெரிதும் கவர்ந்தார். அத்திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றார். முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் “ஸ்லம்டாக் மில்லியனர்”(ஆங்கிலம்) என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு இசையமைத்த ரகுமானுக்கு ஆஸ்கார் விருதும் வழங்கப்பட்டது. தேசிய அளவில் பேசப்பட்ட ரகுமான் உலகளவில் மதிப்பு மிக்க பிரபலமாக அறியப்பட்டார். இவரை இசைப்புயல் என்றும் மொஸார்ட் ஆப் மெட்ராஸ் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
90களில் இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் மக்களின் பெரும் வரவேற்ப்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தேசிய அளவில் இவரது இசை பெரும் புகழைப் பெற்றது. 90களின் பிற்பகுதியில் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய ரகுமான் ஹிந்தி இசையின் போக்கையே மாற்றியமைத்து புரட்சியை ஏற்படுத்தினார். அதனை அம்மக்களும் ஏற்றுக்கொண்டதே ரகுமானின் இசைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
சமீபத்தில் கனடா நாட்டிற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரகுமானுக்கு கனடா அரசு மிகப் பெரிய கவுரவத்தை அளித்து பெருமைப்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டின் ஒன்டாரியோ மாநிலத்தில் மார்கம் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு ஏ.ஆர். ரகுமான் என பெயர் சூட்டியிருக்கிறது. இதனை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட ரகுமான் மார்கம் நகரின் மேயர், இந்தியத் தூதரகச் செயலாளர் இவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்திய நாட்டின் சகோதர சகோதரிகளுக்கும், தன்னோடு பணியாற்றிய தனித்துவம் மிக்க நண்பர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த கவுரவத்தால், ஓய்வறியாது, சோர்வடையாது உழைக்க மிகப் பெரிய பொறுப்பை வழங்கியிருப்பதாகக் கருதுகிறேன் என மேலும் ரகுமான் குறிப்பிட்டிருக்கிறார்.
