இலங்கையில் ஈழத்தமிழர்கள் மற்றும் பிறப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சமீபத்தில் தமிழர் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக மலையக தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் இலங்கை தேசிய சமூகத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெறும் என ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
அனைத்து சிலோன் ஜாமியத்துல் உலமாவின் 100-வது நினைவு தின கொண்டாட்டத்தில் பேசும் போது இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,
நமது பெரும்பான்மையான நேரத்தை நமக்குள்ளே அடித்துக் கொண்ட நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். இது நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்வதற்கான காலம் என நான் நினைக்கிறேன். எனவே இது தொடர்பாக தமிழர்கள், இலங்கை தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். அவர்களது பிரச்சினைகள், நல்லிணக்கத்துக்கான வழிகள் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளோம்.
இலங்கை தமிழர்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது. இதைபோல முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் பேச வேண்டும். மேலும் சிங்கள சமூகத்தினருடனும் நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும். மேலும் ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.