ஏலே பப்ளிஷிங் – மெய்யாகும் கனவுகள்

சிறப்பு தமிழ்நாடு

எழுத்து என்பதொரு கனவுலகம். எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் சென்று வாழ்ந்து பார்க்க விரும்பும் கனவுலகம். எழுதும் அனைவருக்குமான மிகப்பெரிய ஆசையாக இருப்பது தங்கள் எழுத்துகளை அச்சில் புத்தகமாக கண்டிட வேண்டும் என்பது தான். ஆனால் எழுத்தில் தரம் இருந்த போதும் ஒரு சாதரண நபரால் தன் எழுத்துகளை என்றும் புத்தகமாக மாற்ற முடிந்திடுவதில்லை. தட்டப்படும் கதவுகளும், நெருக்கும் பொருளாதாரமும், நிராகரிப்பும் அவனை அந்த எழுத்தை விட்டே கூட அந்நியமாக்கும். இத்தகைய சூழ்நிலை நிலவி வரும் காலகட்டத்தில் தான் பதிப்புலகத்தில் ஒரு புரட்சியாக தோன்றியிருக்கிறது “ஏலே பப்ளிஷிங்க்” நிறுவனம். தன் எழுத்துக்களை தன் சொந்த முயற்சியால் புத்தகமாக்கிய புரட்சிகர இளைஞன் திரு. இருதய ஆஸ்ட்ரோ தான் கண்ட கனவை அடுத்தவர்க்கும் நனவாக்கித் தர எண்ணி துவங்கியிருக்கும் ஜனரஞ்சக பதிப்பகம்.

மிகக் குறைந்த விலையில், சாமனியர்களின் எழுத்தை புத்தகமாக மாற்றி அவர்களின் கனவை உயிர்ப்பிக்கும் திரு. இருதய ஆஸ்ட்ரோ அவர்களுடன் ஒரு சிறிய நேர்காணலை நம் NRI தமிழ் குழு நிகழ்த்தியது. அவரின் மனதைத் தொடும் பதில்கள் உங்கள் பார்வைக்காய்.

கே : ஏலே பப்ளிஷிங்க் பற்றி ஒரு சிறு அறிமுகத்தைக் கொடுங்கள்? ஏன் இந்தப் பெயர்?

ப : என்னை பொறுத்த வரை ஒரு எழுத்தாளன் என்பவன் எழுதுபவன் ! அவன் சுதந்திரமாக எழுத வேண்டும் பண பிரச்சனை பற்றி கவலைபடாமல் அவன் எண்ணங்களுக்காக எழுத வேண்டும் ! அப்படி ஒரு எழுத்தாளன் எந்த கவலையுமின்றி தன் படைப்பை சுதந்திரமாக வெளியிட உருவாக்கப்பட்டதே இந்த ஏலே பப்ளிஸ் என்ற பதிப்பகம் இது ஒரு எழுத்தாளர்களின் நண்பன் போல.

எனது ஊர் திருநெல்வேலி
இங்கே ஏலே என்பது வழக்கு சொல் ! நிறைய பேர் அந்த வார்த்தையை அவமரியாதைக்கு பயன்படுத்தும் சொல் என்றே நினைக்கின்றனர் ஆனால் அப்படியல்ல அது உரிமையுள்ளவர்களிடம் நண்பர்களிடம் பயன்படுத்தும் சொல்லும் கூட படித்து ! படித்து முடித்து மூன்று வருடம் ஊரில் தான் வேலையின்றி இருந்தேன் அப்பொழுது சொந்தக்காரங்க நண்பர்கள் எல்லாம் கூப்பிட்டு ” ஏலே எப்பந்தான் வேலைக்கு போக போற ” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள் அந்த நேரம் தான் என் பதிப்பகத்திற்கு பெயரும் தேடிக் கொண்டிருந்தேன்.
மனதுக்கு ” ஏலே ” என்னும் வார்த்தை ரொம்ப நெருக்கமாகிவிட்டது அதையே வைத்துவிட்டேன்

எங்களை பொறுத்த வரை எங்கள் பதிப்பகத்தில் புத்தகம் வெளியிடும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் எங்கள் வாடிக்கையாளர்கள் அல்ல !

ஏலே என்று நாங்கள் உரிமையாய் கூப்பிடும் அளவிற்கு எங்கள் நண்பர்கள்

கே : இந்த எண்ணம் எப்படி உருவானது? உங்கள் திட்டத்தின் மையக்கரு என்ன ?

ப : நானும் அடிப்படையில் ஒரு எழுத்தாளன் இதுவரை மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்
அந்த புத்தகம் வெளியிட நான் சந்தித்த இன்னல்கள் கஸ்டங்கள் என எல்லாமே மற்ற எழுத்தாளர்களுக்கு இருக்க கூடாது என நான் உருவாக்கியதே இந்த ஏலே பதிப்பகம் ! எல்லா பிரச்சனைகளையும் நாங்கள் சரிசெய்துவிட்டோமா என்றால் இல்லை தான். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்னையை கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் கண்டுபிடிக்க போராடிக்கொண்டு இருக்கிறோம் !

கே : உங்களின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன?

ப : இன்னும் இந்த புத்தக வெளியீட்டை இணையத்தை பயன்படுத்தி மேலும் எளிமையாக்குவது அதற்கான வேலைகள் நடைபெறுகிறது எதிர்காலத்தில் அதற்கான அறிவிப்புகள் நிச்சயம் வரும்.

கே : இது உங்களுக்கு அளிக்கும் உணர்வைக் குறித்து விவரியுங்கள்?

ப : ஒவ்வொரு புத்தகத்தை திறக்கும் பொழுதும் நீ ஒரு வாழ்க்கையை திறந்து படிக்கிறாய் என்று சொல்வார்கள்

நான் தினமும் பல வாழ்க்கையோடு பயணிக்கிறேன் ! தினமும் ஒன்றை கற்றுக்கொள்ள முடிகிறது ! ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவம்.

கே : உங்கள் குழுவினர் பற்றிய ஒரு சிறு அறிமுகம்?

ப: எங்களது குழு சிறிய குழு தான் ! பெரும் வாழ்த்துகள் அவர்களுக்கே உரித்தானது. அபிதா மற்றும் பரினாஸ்ரி இருவருக்கும் எனது நன்றிகள் !

கே : இது உங்கள் வாழ்வில் நிகழ்த்தியிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றம் என எதைக் கூறுவீர்கள்?

ப: என்னை கொஞ்சம் பொறுப்பாக்கியிருக்கிறது ! என் கடமையை உணர்த்தியிருக்கிறது!

கே : ஒரு பதிப்பாளராக அச்சு உலகத்தின் எதிர்காலத்தைக் குறித்த உங்கள் மதிப்பீடுகள் என்னென்ன?

ப: இன்னும் பிரின்டிங் முறை நவீனமாக்கப்படும் ஆனால் இந்த துறை வீழாது ! எத்தனை இ ரீடிங் வந்தாலும் அச்சு புத்தகங்களுக்கு என்று ஒரு மதிப்பும் ஒரு காதலும் எப்போதும் இருக்கும் !

கே : வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்னவாக இருக்கும்?

ப : எழுதுக்களை
யாருக்காகவும் இன்றி உங்களுக்காக எழுதுங்கள் ! ஆயிரம் எதிர்மறை விமர்சனங்கள் இருக்கும் ! விமர்சனங்களே இல்லாது கூட இருக்கும் ! ஆனால் நீங்கள் உங்களுக்காக ஒரு ஆத்ம திருப்தியுடன் எழுதினால் அந்த எழுத்து உங்களை என்றும் கைவிடாது ! உங்களுக்கு மேலும் ஒரு கரமாக, நண்பனாக ஏலே பப்ளிஷிங்க் எப்போதும் இருக்கும்.

கே : ஒரு பதிப்பாளராக அச்சு உலகில் என்னென்ன நவீன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?

ப : ஒரு புத்தகம் உருவாக்குதலை டிசைனிங் மற்றும் பிரின்டிங் என இரு வகைகளாக பிரிக்கலாம்

இதில் டிசைனிங்கில் தற்போது பல மாற்றங்கள் எளிமைகள் வந்து கொண்டே இருக்கின்றன !

பிரிண்டிங்கிளும்
சில மாற்றங்கள் வந்திருக்கிறது பிரின்ட் ஆன் டிமான்ட் என்ற முறை குறைந்த எண்ணிக்கை கொண்ட புத்தகங்களையும் தற்பொழுது பிரின்டிங் செய்ய முடிகிறது ! ஆனாலும் அதை இன்னும் எளிமை படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் ஒரு எழுத்தாளனின் பண பாரத்தை முற்றிலும் குறைக்க இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அதன் மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்று நம்புகிறேன் ! நிச்சயம் ஏலே பப்ளிஸ் அதை கொண்டு வரும் அதற்கான முயற்சிகளில் கூட நாங்கள் தற்பொழுது ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

கே : உங்கள் புத்தக வெளியீடு அனுபவங்களில் மறக்க முடியாத தருணம் ஏதேனும் உள்ளதா?

ப : எங்களுடைய மூன்றாவது புத்தக பதிப்பில் எனது பிழையில் புத்தகம் மாற்றி அச்சடிக்கப்பட்டுவிட்டது ! அப்பொழுது தான் தொடங்கினோம் எனவே அதில் இருந்து எங்களுக்கு பெரியதாக லாபம் கூட கிடைத்திருக்கவில்லை கிடைத்த லாபமும் பதிப்பகத்தை மேம்படுத்த செலவாகிவிட்டது

என்னுடைய தவறால்
சுமார் 8000 ருபாய்க்கு புத்தகங்களை எங்கள் பணத்தில் மறுபதிப்பு செய்ய வேண்டியிருந்தது ஒரு தொழில் தொடங்கி அதில் லாபம் கிடைக்கும் முன்பே 8000 ரூபாய் நஷ்டம் என்றால் அது மிக கடினம் தான் ஆனால் நாங்கள் 8000 கடன் வாங்கி அந்த எழுத்தாளருக்கு ஒரு வாரத்தில் புத்தகத்தை மறுபதிப்பு செய்து கையில் ஒப்படைத்தோம் அவர்கள் பணம் செலுத்தியதை விட 1000 ரூபாய் அதிகமாய் !

இந்த பதிப்பகம் தொடங்கி முதல் வாரமே எங்கள் நம்பிக்கையை காப்பாற்ற போராட வேண்டியிருந்தது அதில் வெற்றியும் கண்டோம் !

இப்பொழுது எங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு கூடுதல் கவனமுடன் செயல்படுகிறோம்.

தன் கனவிற்காக உழைப்பவன் மனிதன். பிறர் கனவையும் மெய்பிப்பவன் மாமனிதன். இந்த சொற்றொடர் திரு.இருதய ஆஸ்ட்ரோ அவர்களுக்கு மிகப் பொருத்தம். மென்மேலும் பல புத்தகங்களைப் பதிப்பித்து பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கி பதிப்புலகில் தனி முத்திரை பதிக்க அவரையும், ஏலே பப்ளிஷிங் நிறுவனத்தையும், NRI தமிழ் சார்பாக வாழ்த்துகிறோம்.

3 thoughts on “ஏலே பப்ளிஷிங் – மெய்யாகும் கனவுகள்

  1. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் தோழரே. ஒரு கவிஞன் என்கிற வகையில் நானும் எனது தனித்துவமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  2. என் பெயர் சரண்யா தேவி நான் இளம் இலக்கியவியல் இரண்டாம் ஆண்டு பயில்கிறேன்.தவதிரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி-பேரூர் கவிதை மீது நான் கொண்ட காதலும் கவிதை என் மீது கொண்ட காதலுமே என்னை கவிதை எழுத செய்தது.இப்போது ஏலே பப்ளிஷிங் மூலம் எனக்கொரு வாய்ப்பு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.