தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் முறைகேடு ஆகியவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அதன்பின்னர், அதிமுகவினர் பேரணியாக புறப்பட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து திமுக அரசு மீதான புகார் மனுவை அளித்தனர். இந்த பேரணியில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், ஜெயக்குமார், சி விஜயபாஸ்கர், ஒ எஸ் மணியன், பா வளர்மதி, கோகுல் இந்திரா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, ஜெயக்குமார், சி.வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி வேலுமணி பெஞ்சமின், அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
ஆளுநரைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஊழல் ஆட்சியாகிவிட்டது. அது தொடர்பாக ஆளுநரிடம் புகார் கொடித்துள்ளோம். திமுக அரசின் ஊழல் என்ற தலைப்பில் எந்த எந்த துறையில் ஊழல் என்று புகார் மனு கொடுத்துள்ளோம். சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளை விவகாரத்தில் கிராம நிர்வாக அதிகாரியை அரசு அலுவலகத்தில் வைத்து கொலை செய்துள்ளனர்.
தஞ்சை, செங்கல்பட்டு மாவட்டங்களில் போலி மதுபானங்களால் தொடர் இறப்பு ஏற்பட்டுள்ளது. அரசு விரைந்து செயல்பட்டு போலி மதுபானங்களை தடுத்திருக்க வேண்டும். இருவரும் தற்கொலை செய்துக்கொண்டார்களா என்ற கோணத்தில் விசாரிப்பது விந்தையாக உள்ளது.
தஞ்சையில் உயிரிழந்தவர்களின் உடலை ஏன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும். சாராய இறப்பு ஏற்பட்ட உடனே 2000 பேர் மீது வழக்கு ஏன்? இருசக்கர வாகனத்தில் சங்கிலி பறிப்பு நடந்தது தற்போது காரில் சென்று சங்கிலி பறிப்பில் திருடர்கள் ஈடுபடுகின்றனர்.
திருடர்களுக்கு அச்சமில்லை. முதியோர்களை குறிவைத்து தொடர்கொலைகள் அரங்கேறி வருகின்றது. தமிழகத்தில் டாஸ்மார்க் பார்கள் 75% மேல் டெண்டர் எடுக்காமல் சட்டவிரோதமாக நடக்கிறது. இதன் மூலமாக போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றது’ என்று குற்றம்சாட்டினார்.