அதிமுக மாநில மாநாடு மதுரையில் தடபுடலாகத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டின் தொடக்கமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை மாநாட்டு வளாகத்தில் ஏற்றி வைத்தார். அப்போது வானில் பறந்த ஹெலிகாப்டர் மூலம் ஆயிரம் கிலோ ரோஜா மலர்கள் தூவப்பட்டன.
இதையடுத்து சமாதான புறாக்களை பறக்கவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் மதுரையில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டத்தைக் காண முடிந்தது. கடந்த சனிக்கிழமை மாலையில் இருந்தே மாநாட்டு வளாகத்தில் அதிமுக தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தொண்டர்கள் வந்து சேர அதிமுக தலைமை சிறப்பு ரயில்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகளின் தலைமையில் பல்வேறு வாகனங்களில் தொண்டர்கள் வந்து சேர்ந்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாநாட்டுத் திடல் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது என்றும் பலர் மனைவி, பெற்றோர், பிள்ளைகளுடன் மாநாட்டிற்கு வந்திருந்தனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாநாட்டுக்கு வந்த ஏராளமான வாகனங்களை ஒழுங்குபடுத்த அதிமுக பேரவை நிர்வாகிகள் சுமார் 3,000 பேர் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன.
மாநாட்டின் நுழைவு வாயில் அரண்மனை போன்று பின்னணியில் மலைகுன்றுகள் இருப்பது அமைத்து அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கே.பழனிசாமி புகைப்படங்கள் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளன.
15 லட்சம் தொண்டர்களுக்கு உணவு தயாரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களுக்கு 35 ஏக்கரில் அறுசுவை விருந்து கூடம், 350 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளன.
