பிகார் மாநிலம் பாட்னாவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் கட்சிகளின் பிரதிநிதிகள் அனுப்பாமல் தலைவர்களே பங்கேற்க வேண்டும் எனவும் முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டிருந்தார். நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே பாட்னா சென்றுவிட்டார். இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடக்கும் கூட்டத்தை ஆம் ஆத்மி புறக்கணிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் அரசு அதிகாரிகளை மத்திய அரசே நியமிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காததால் ஆம் ஆத்மி அதிருப்தியில் உள்ளது. எனவே காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிடில் நாளைய கூட்டத்தில் பங்கேற்பில்லை என ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
