கல்லூரிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.

செய்திகள் வட அமெரிக்கா

யுனைடெட் ஸ்டேட்ஸின் கறுப்பின மாணவர்கள் அதிகம் பயிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க பல கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையொட்டி செவ்வாயன்று கல்வி வளாகங்கள் பூட்டப்பட்டன. ஒரே நாளில் இதேபோன்று பனிரெண்டிற்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. ஆகையால் வகுப்புகளை ரத்து செய்துள்ளனர்.

பால்டிமோர் முதல் நியூ ஆர்லியன்ஸ் வரையிலான நகரங்களில் விடுக்கப்பட்ட இத்தகைய அச்சுறுத்தல்கள் அமெரிக்க கறுப்பின வரலாற்று மாதத்தின் முதல் நாளுடன் ஒத்துப்போகின்றன.

புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள எட்வர்ட் வாட்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஷக்காரி பெய்சன் கூறுகையில் , “இந்த மாதத்தில் இந்த குறிப்பிட்ட அச்சுறுத்தலை நாங்கள் பெற்றோம் என்பதை தற்செயலான நிகழ்வாக நாங்கள் நினைக்கவில்லை. ஜாக்சன்வில் ஷெரிப் அலுவலகத்திற்கு அதிகாலை 3:30 மணியளவில் வந்த அழைப்பில், வளாகத்தைச் சுற்றி “பல வெடிபொருட்கள்” வைக்கப்பட்டுள்ளதாகவும், 12 மணி நேரம் கழித்து அவை ஒவ்வொன்றாக வெடிக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து பள்ளி துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்” என்று வருத்தம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மதியம் வரை மோப்ப நாய்களுடன் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் வளாகத்தில் ரோந்து சென்றனர், என்றார். ஜாக்சன்வில் ஷெரிப் அலுவலகம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

FBI வெளியிட்ட அறிக்கையில் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் பற்றி அறிந்திருப்பதாகவும், சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதன் சட்ட அமலாக்க பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நிகழும் எந்த விஷயங்கள் கண்ணில்பட்டாலும் அது குறித்த தகவல்களை பீயூரோவுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு FBI அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி செய்தியாளர் சந்திப்பில், “இந்த அச்சுறுத்தல்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டோம்” என்று கூறினார்.

”எங்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் பணியை நிறைவேற்றுவதில் இருந்து இத்தகைய அச்சுறுத்தல்கள் எங்களைத் தடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று ஹோவர்ட் பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சோதனையில் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர், பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *