அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியில்லை என்று தமிழ்நாட்டில் உள்ள அமுல் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது. கொள்முதல் விலை 2 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும், கொள்முதல் தொகை உடனடியாக வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பையும் அமுல் நிறுவனம் வெளியிட்டது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்யும் அமுல் நிறுவனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதினார். தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமுல் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :
”அமுல் நிறுவனத்தால் 100% ஆவினுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. ஆவினை விட கூடுதலாக கொள்முதல் விலை கொடுக்க மாட்டோம். அமுல் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும். 10 நாட்களுக்கு ஒரு முறை பால் கொள்முதலுக்கு பணம் வழங்கப்படும். தற்சார்பு அமைப்பு போல் அமுல் நிறுவனம் இயங்கும். தற்போதுதான் 3,000 லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். 500 விவசாயிகள் மட்டுமே பால் வழங்குகிறார்கள். இடைத்தரகர்கள் மூலமாக நாங்கள் பால் கொள்முதல் செய்ய மாட்டோம்”. இவ்வாறு அவர்கள் விளக்கமளித்தனர்.
