அண்ணா பல்கலைக்கழகம் 1978ம் ஆண்டு செப்.4ம் நாள் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரால் இப்பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் சென்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் 6 அரசு பொறியியல் கல்லூரிகளையும், 3 அரசு உதவிப் பெறும் கல்லூரிகளையும், 400க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரியிகளையும் கவனித்துக் கொள்கிறது. சென்னையில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 4 கல்லூரிகள் இயங்குகின்றன.
பொறியியல் படிப்புகக்கான கலந்தாய்வு மற்றும் கல்லூரிகளுக்கான அட்டவணை, தேர்வு, பாடத்திட்டங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகமே கவனித்துக் கொள்கிறது. 2001ம் அமலான சட்டத்தின்படி அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் இப்பல்கலைகழத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் படிப்பிற்கு முதலில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைப்பெற்றது. 2006ம் ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2007ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஆறு பல்கலைகழகங்களாகப் பிராக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.பின்னர் 2012ம் ஆண்டு அனைத்தும் ஒன்றாக்கி பின்னர் நான்கு மண்டலங்களாக செயல்பட்டு வருகின்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் 17ம் இடத்தில் இருக்கிறது. பொறியியல் பட்டப்படிப்பின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசைப் பட்டியலில் 10ம் இடத்தில் இருக்கிறது. இன்றோடு அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவித்து 44 ஆண்டுகள் ஆகிறது.