கருணாமிர்த சாகரதத் திரட்டு நூலை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டார்.

செய்திகள் தமிழ்நாடு

ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷனும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் இணைந்து
தமிழிசையின் தந்தை மு. ஆபிரகாம் பண்டிதர் எழுதிய
‘தமிழிசையை எளிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்’

  • கருணாமிர்த சாகரதத் திரட்டு நூலை
    எளிய அழகிய நவீனப்பதிப்பாகக் கொண்டுவருகிறோம்.
    அந்நூலை நம் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டார்.

தமிழிசை இயக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் இந்த நூலைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்

நூலைப் பெறுவதற்கான விவரங்களுக்கு,
கீழே உள்ள இணைய தளத்தை அணுகுங்கள்.

https://www.karunamirthasagaram.org/karuna-2022.php

நூலின் முகவுரை:

தமிழ் இசை ஆர்வலர்களே, வணக்கம். புத்தாண்டு வாழ்த்துகள்.

ஆழமான அறிவியல் உண்மைகளைப் பேசுகிறவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்திய இசையின் வேர்களை அசைக்க முடியாத அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு வெளிப்படுத்தியவர், தமிழிசையின் தந்தை மு. ஆபிரகாம் பண்டிதர். தமிழிசையின் மரபுகளைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள, நாம் பயில வேண்டிய முதல் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர். அவர் 1917 – இல் எழுதிய, கருணாமிர்தசாகரம், இந்திய இசை வரலாற்றில் ஒரு மைல் கல். தமிழ்த்திணை இசையின் தொன்மை, வரலாறு, சுருதிமுறைகள், பண்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் ‘கருணாமிர்தசாகரம்’ நூல் வெளிவந்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. உலகமே வியக்கும் வண்ணம், ஏழு இசைமாநாடுகள் நடத்தி, இசைத்தமிழை உயிர்ப்பித்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை இயக்கத்தின் முன்னோடியான அவரின் ஆய்வுகள் தமிழிசை இயக்கத்தை ஒரு மாபெரும் வெகுசனப் பண்பாட்டு அசைவாக மாற்றியிருக்க வேண்டும், ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆபிரகாம் பண்டிதர் இன்னமும் மேகம் கவிந்த தாரகையாக இருக்கிறார். பாவாணருக்கு முன் தமிழரின் தொன்மைகளை, குமரிக்கண்ட ஆய்வுகளை முதலில் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதர், உண்மையில் தமிழ்த் தேசியத்தின் முன்னோடியும் பண்டிதரே. ஆனால் ஒரு நூற்றாண்டு கழித்தும் இன்னும் அவரைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டிய துயரச் சூழலில்தான் இருக்கிறோம்.

தமிழில் பாடுவது தமிழிசை என்பதை விட, கர்னாடக இசை பாடப்படும் இசை முறை (musical system) தமிழர்களுடையது என்பதுதான் ஆபிரகாம் பண்டிதரின் அடிப்படைச் செய்தி. எந்த மொழியில் பாடினாலும் இந்துஸ்தானி உட்பட அது தமிழிசைதான் என்கிறார் பண்டிதர்.

ஆயினும், குழந்தைகள் சிறுவயதிலிருந்தே தமிழில் பாட வேண்டும், இசையின் அரிச்சுவடிகளைத் தமிழில் கற்க வேண்டுமென்பது அவரின் அவா. எனவேதான் 1907ஆம் ஆண்டிலேயே “கருணாமிர்த சாகரத் திரட்டு ” (A Practical Course in South Indian Music For Beginners, தென் இந்திய சங்கீத ஆரம்ப அப்பியாசமுறை) என்ற நூலை உருவாக்கினார், ஆபிரகாம் பண்டிதர். இசை பயிலும் ஒவ்வொருவர் வீட்டிலும் இந்நூல் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. நிச்சயமாக இல்லை. இந்நூல் மீண்டும் இயக்கமாக்கப்பட வேண்டும்.

ஆபிரகாம் பண்டிதரின் நூல்களைத் தேடிக்கண்டுபிடித்து மக்களிடம் சேர்ப்பித்தவர் எங்களின் நண்பர் தமிழ் மண் பதிப்பகம் அய்யா கோ. இளவழகனார். ஆயினும் அவர் வெளியிட்ட கருணாமிர்த சாகரம் ஏழு தொகுப்புகள் வரிசையிலேயே இந்நூலையும் முதல் நூலாகப் பதிப்பித்தார். இரு பிரச்னைகள்; இதுவும் ஆய்வு நூலாகக் கருதப்பட்டது, தனியே பிரித்து நூலை வாங்குவதும் சிரமம். உண்மையில், ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ குழந்தைகளுக்கான நூல். எனவே, இதனை தனிநூலாக வெளியிட்டு அது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இக்கருத்தை இளவழகனார் அய்யாவிடம் தெரிவித்தோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் நீங்கள் ஒளியச்சு செய்ய வேண்டாம் நானே தருகிறேன் என்று எங்களுக்குக் கொடுத்து உதவினார். அய்யா இன்று நம்மிடையே இல்லை. எனினும் அவர் பெயர் சொல்லும் நூலாக இது அமையும்.

ஆபிரகாம் பண்டிதருக்கு நாம் செலுத்தும் சின்னஞ்சிறிய நன்றிக்கடன் இந்தப் புதிய பதிப்பு. இன்று தேனாக வந்து நம் காதில் பாயும் இசை அனைத்துமே, பல்லாயிரம் ஆண்டு தமிழிசையின் எதிரொலிப்பு என்று அறிகிறோம்.

நம் மூச்சும் பேச்சும் தமிழைசையே!
வாழ்க தமிழ்! வளர்க தமிழிசை!

Leave a Reply

Your email address will not be published.