சென்னையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலினை சந்தித்தார்; மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்ட இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது டெல்லி முதல்வரோடு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் , ஆம் ஆத்மி எம்பிக்களான சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சத்தா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் தமிழ்நாட்டு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ், கனிமொழி எம்பி, டிஆர்.பாலு எம்பி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு ”The Glorious State of Tamilnadu ” என்ற தொகுப்பை வழங்கினார்.
இதன் பின்னர் மூன்று மாநில முதலமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
“ மோடி தலைமையிலான மத்திய அரசு டெல்லி முதல்வர் மற்றும் அவரது கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தொடர் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் டெல்லி மாநில அரசுக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் மூலமாகவும் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களும் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசு டெல்லி அரசுக்கு எதிராக கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *