நாட்டில் உள்ள 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்ற தரவுகள் வெளியாகி உள்ளன.
ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய இரண்டும் சேர்ந்து, தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ஆய்வுசெய்து இந்த பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. அதன்படி ஜம்மு காஷ்மீரை தவிர்த்து, 28 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளது தெரியவந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக 510 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து 163 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு 2வது இடத்திலும், 63 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் 14வது இடத்தில் உள்ளார். மொத்தமுள்ள 30 முதலமைச்சர்களில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தவிர 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். மம்தா பானர்ஜிக்கு 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான சொத்து இருப்பது இந்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.