இன்றைய நாளில் நம்மை பெரிதும் அச்சுறுத்தும் ஒன்று கொரோனா இரண்டாம் அலை.ஒரு பக்கம் ஆறு இலக்க எண்ணில் எகிறும் தினசரி பாதிப்பு மற்றொரு பக்கம் இறப்பு விகிதம். இதெயெல்லாம் மீறி நாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோமோ எனும் சந்தேகம்…?
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் இந்த கொரோனா நம்மை ஆளத்தொடங்கியது முழுமையாக ஓராண்டு கடந்த போதிலும் கொரோனா பற்றிய பேச்சும் சிந்தனைகளும் இல்லாமல் நாள் முடிவதில்லை.இத்தனைக்கும் கடந்த ஆண்டை போல் அல்லாது இந்தாண்டு தடுப்பூசிகளும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஆனாலும் கர்ப்பிணி பெண்கள் , குழந்தைகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் இன்னும் பரிந்துரைக்கவில்லை .
அப்படியான சூழலில் நம்மை காத்துக்கொள்வதற்கான ஒரே வழி சுய கட்டுப்பாடு தான். தேவையில்லாது வீட்டை விட்டு வெளியே செல்லுவதை தவிர்த்தல் நல்லது. முக கவசம் அணிதல் , தனி மனித இடைவெளி குறித்து நாம் அறிந்திருந்தாலும் கூடவே உணவியல் பழக்கத்தையும் , வாழ்வியல் முறை மாற்றத்தையும் கடைப்பிடித்தாலே நம்மையும் நம் சுற்றத்தாரையும் காத்துக்கொள்ள முடியும்.
தினசரி உணவுகளில் கீரைகள் , பழங்கள் போன்றவற்றை அதிகளவில் சேர்த்து கொள்ளுதல் நல்லது. இஞ்சி , பூண்டு , மிளகு , மஞ்சள் போன்றவற்றை அன்றாட உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினந்தோறும் வேப்பிலை , ஓமம் , குங்கிலியம் போன்றவற்றை கொண்டு சாம்பூராணி போடலாம். நொச்சி , துளசி , மஞ்சள் போன்றவற்றை கொண்டு வேது பிடிக்கலாம்.இதன் மூலம் பருவகால மாற்றத்தால் ஏற்படும் ஜலதோஷம் , சைனஸ் போன்ற பிரச்சனைகள் குறைவதோடு கொரோனாவில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும் . தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் கல்லுப்பை வெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு , வலி முதலியன சரியாகும். முன்னெச்சரிக்கையாக உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் காய்கறி சூப் , கஷாயம் முதலியவற்றை அருந்தலாம்.
சிலருக்கு காலை , மாலையில் நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் இருக்கும்.இந்த நாட்களில் நடைபயிற்சி செய்ய இயலாதவர்கள் தங்கள் வீட்டிலோ மொட்டை மாடியிலோ இருக்கும் சிறிய அளவிலான இடத்தில் கூட,”எட்டு நடை ” பயிற்சியை மேற்கொள்ளலாம். யோகா , தியானம் , மூச்சுப்பயிற்சி போன்றவற்றையும் செய்யலாம்.நல்ல ஆரோக்கியமான உணவுடன் உடற்பயிற்சி ,அச்சம் தவிர்த்த அமைதியான மனநிலையில் இருப்போமேயெனில் நிச்சயமாக நம்மை கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.
ஒரு வேளை ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது அருகில் உள்ள அரசு / தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொரோனா ஒரு தொற்றுநோய் தான் ஆகவே சரியான நேரத்தில் பரிசோதனை செய்து உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமடைந்து நம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம்.
எனவே அச்சம் தவிர்ப்போம் கொரோனாவை வெல்வோம்.
- மரு . கீதா பரமன்