இந்த ஒரு வாரமாக பெரும்பாலான பெற்றோரை அச்சுறுத்தும் ஒரு விஷயம் இணைய வழி வகுப்புகளில் பள்ளி மாணவிகளுக்கு தரப்பட்ட பாலியல் தொல்லைகளும் , அது தொடர்பாக குவியும் புகார்களும் தான்.வெளியில் சென்றால் தான் பாதுகாப்பில்லை வீட்டில் பிள்ளைகள் பாதுகாப்பாகவே இருப்பதாய் தான் இத்தனை நாட்களாய் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் இன்றைய நிலையோ , நம் வீட்டிற்குள் ,நம் கண்காணிப்புக்குள் இருந்த போதிலும் கூட இந்த மாதிரியான தொல்லைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த பயத்தை உண்டாக்கியிருக்கிறது என்பது மிகையல்ல.
அதுவும் ஒரு நாள் இரண்டு நாள் எல்லாம் கிடையாது கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் அப்படியெனில் எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மாணவிகள் தங்களுக்கு நடந்தவற்றை வெளியில் சொல்லாமல் இருக்க தேர்வு மதிப்பெண்கள் காரணமாக காட்டி நேரடியாகவே அச்சுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்…?
1.பெற்றோர் -குழந்தைகளிடையே சரியான புரிதல் இல்லாமை.
குழந்தைகளை பொறுத்தவரை அவர்களது பிரச்சனைகளை எவ்வித தயக்கமும் , பயமும் இன்றி பெற்றோரிடம் சொல்லுவதற்கான வாய்ப்பினை அளித்திட வேண்டும்.
ஒரு வேளை எதுவும் தவறாக செய்திருப்பின் தடாலடியாக தண்டனை என இறங்கிவிடாது அதனை விளக்கி புரிய வைத்திட வேண்டும்.
2.பிள்ளைகளின் அறியாமை.
பிள்ளைகளை பொருத்தவரை வளரிளம் பருவத்தில் ஏற்படுகின்ற உடலளவிலான மாற்றங்களும் , ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் நிறைய குழப்பங்களையும் , சந்தேகங்களையும் ஏற்படுத்தி விடுகிறது.
அந்த நேரத்தில் சந்தேகத்தை தீர்த்துவைக்க பெரும்பாலும் நண்பர்களின் உதவியையே நாடுகிறார்கள் , சில சமயங்களில் அதுவே தவறான வழிகாட்டுதலாக இருந்துவிடுகிறது.
இதுபோன்றதொரு சூழலில் பாலியல் கல்வியை வளர் இளம் பருவத்திலேனும் அவர்களுக்கு பயிற்றுவித்தல் நல்லது.
இதன் மூலம் அவர்கள் தங்கள் உடலை பற்றிய புரிதல் , எதிர்பாலினத்தவரோடு இயல்பாக பழக முடிவதோடு , பாலியல் சார்ந்த தொல்லைகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் முடியும்.
அது மட்டுமன்றி பிள்ளைகளின் நண்பர்கள் , பழக்கவழக்கங்கள் , செயல்பாடுகள் பள்ளியின் சூழல் இவற்றை தொடர்ந்து கண்காணித்திடுவதும் அவசியம் ஆகிறது.