உத்தர பிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையொட்டி தீபஉற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரே இடத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்பட்டு புதிய கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையின்போது உத்தர பிரதேச மாநிலம் சரயு நதிக்கரையில் தீப உற்சவ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று இரவு சரயு நதிக்கரையில் தீப உற்சவ விழா பிரமாண்டமாக நடந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீபங்கள் ஏற்றி ஆரத்தி செய்து விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் 22 லட்சம் தீபங்கள் சரயு நதிக்கரையை சுற்றி ஏற்றப்பட்டது. இதனால் அந்த நதிக்கரை தீபஒளியில் பிரகாசித்தது.
இந்த தீபங்களை 25 ஆயிரம் தன்னார்வலர்கள் ஏற்றினர். கடந்த முறையை விட ஆறரை லட்சம் தீபங்கள் கூடுதலாக ஏற்றப்பட்டது. இதையடுத்து ட்ரோன் மூலம் அங்கு ஏற்றப்பட்டு இருந்த தீபங்கள் எண்ணப்பட்டன. அப்போது 22 லட்சத்து 23 ஆயிரம் தீபங்கள் ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் எரிந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
இந்த தீப உற்சவ விழா கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்று கொண்டார். அதன்பிறகு விழாவை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைக்க உதவியவர்களுக்கு அவர் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். கடந்த 2017 ம் ஆண்டில் அயோத்தியில் ஒரு லட்சத்து 71ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது. 2018ல் 3 லட்சம் தீபங்களும், 2019ல் 4 லட்சம் தீபங்களும், 2020ல் 6 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது. அதன்பிறகு 2021ல் 9 லட்சத்து 41 ஆயிரம் தீபங்களும், 2022ல் 15 லட்சத்து 76 ஆயிரம் தீபங்களும் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 22 லட்சத்து 23 ஆயிரம் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.