கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார். கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த உதவும் முன் முயற்சியாகவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நடவடிக்கையாகவும் பிரதமர் மோடி ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார்.
இந்த நிறுவனம், சிக்கபல்லபூரின் முட்டெனஹள்ளியில் சத்யசாய் கிராமத்தில் ஸ்ரீ சத்ய சாய் உயர்திறன் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவனம் மருத்துவக்கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வணிகமயமாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்கும் தொலைநோக்குப் பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மருத்துவக்கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதிகளை கட்டணமின்றி வழங்கவுள்ளது. இந்த நிறுவனம் 2023-ம் கல்வி ஆண்டில் இருந்து செயல்பட தொடங்கும்.
இதனிடையே நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் உலகத்தரத்தில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக பெங்களூரு மெட்ரோ திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் ஒயிட்ஃபீல்டு (கடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுரம் வரையில் அமைக்கப்பட்டுள்ள 13.71 கி.மீ. நீள வழித்தடத்தை பிரதமர் மோடி ஒயிட்ஃபீல்டு(கடுகோடி) மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் டிக்கெட் பெற்றுக் கொண்டு ரயிலில் பயணம் செய்தார். அப்போது, பிரதமர் மோடி மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். ரூ.4,250 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் பெங்களூரு நகர பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான மற்றும் வசதியான பயணத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பயணத்தை எளிதாக்கி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.