தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவக்கூடாது என்ற சட்டம், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்பேரில், உரிமம் பெறாமலும், உரிமக்காலம் முடிந்தபிறகும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து உரிமக்காலம் முடிந்தும் பேனர் வைத்துள்ள நிறுவனம், தனி நபர் உள்ளிட்டோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல், அனுமதியின்றி பேனர் வைப்போருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேனர்களால் ஏற்படும் விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு, சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது நில உரிமையாளரே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
