ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழா
அமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அரங்கம் முழுதும் மக்கள் வெள்ளம் சூழ்ந்து பொங்கல் விழா திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.
பாரதி கலை மன்ற 2023 ஆம் ஆண்டின் செயற்குழு, கங்காமலர் சிவப்பிரகாசு அவர்களின் தலைமையில் அணிவகுத்து, நமது தமிழ் கலாச்சார முறைப்படி குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
தலைவர் திருமதி. கங்காமலர் சிவப்பிரகாசு, தனது குழுவின்
துணைத்தலைவர் திருமதி.விஜி திரு,
செயலாளர் திருமதி.சுபா கண்ணன்,
இணை செயலாளர் திருமதி.உஷா வாசு,
பொருளாளர் திருமதி.அனிதா குமரன்,
தகவல் தொடர்பு இயக்குனர் திருமதி.சௌம்யா கணேஷ்ராம்,
இணை தகவல் தொடர்பு இயக்குனர் திரு.தங்கராஜ்,
இலக்கிய இயக்குனர் திருமதி.கௌசல்யாதேவி நம்பி,
இணை இலக்கிய இயக்குனர் திருமதி.ராஜி வாஞ்சி,
இயக்குனர் 1. திருமதி. சவிதா வித்யபிரகாஷ்,
இயக்குனர் 2. திரு. பாலா பாலசந்திரன்,
முன்னாள் தலைவர். திருமதி.வித்யா ஸ்ரீதர், மற்றும்
தமிழ்ப் பள்ளி இயக்குனர் திருமதி.ஸ்ரீதேவி சுப்பிரமணியன் ஆகியோரை அவையினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பாரதி கலை மன்றம், இம்மன்றத்தின் மூத்த தலைவர். திரு.சாம் கண்ணப்பன் அவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் அனைவரையும் கௌரவித்தது. மேலும், மீனாட்சி திருத்தலத்தின் பொருளாளர் திரு.அழகப்பன் அவர்களையும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தது. விழாவினை சிறப்பிக்க பியர் லேண்ட் மேயர். திரு. கெவின் கோல் மற்றும் பியர் லேண்ட் ஆலோசகர். திரு.ஜோசப் ஈ கோசா இருவரும் வந்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களை திருமதி.கங்கா மலர் சிவப்பிரகாசு மற்றும் திருமதி.விஜி திரு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
தமிழ்ப் பள்ளி இயக்குனர் திருமதி.ஸ்ரீதேவி சுப்பிரமணியன், மன்ற தமிழ்ப்பள்ளியின் அனைத்து கிளை ஒருங்கிணைப்பாளர்களை அவையினருக்கு அறிமுகம் செய்து வைத்து கௌரவித்தார். ஹூஸ்டன் மாநகரக் குழந்தைகள் அனைவரும் தங்களது நடனம் மற்றும் பாடல் திறமைகளை அழகாக வெளிப்படுத்தினர்.
குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களுக்கு சர்க்கரைப் பொங்கலாக இனித்தது. பாரதி கலை மன்ற பொங்கல் விழாவினை சிறப்பிக்க, மக்கள் மத்தியில் புகழ் பெற்ற நடிகர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் பல குரல் மன்னன், திரு. படவா கோபி அவர்கள், மனைவி திருமதி. ஹரிதா கோபி அவர்களுடன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். திரு. படவா கோபி அவர்களை வரவேற்க, ஹூஸ்டன் மாநகரில் பறை இசை வகுப்பு நடத்தி வரும் திரு.தங்கராஜ் அவர்கள் தனது குழுவினருடன், பறை இசையால் வரவேற்றார். அரங்கம் முழுவதும் பறை ஒலி நிறைந்து சிறப்பு விருந்தினரையும், மக்களையும் மகிழ்வித்தது. ஹூஸ்டன் குழந்தைகளின் கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து, திரு.படவா கோபி அவர்கள் தனது பல குரல் திறமையால் மக்களுக்கு சிறப்பு விருந்து படைத்தார். அவரது மனைவி திருமதி.ஹரிதா கோபி அவர்கள் திரை இசை பாடல்கள் பாடி அவையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.
ஐம்பதாம் ஆண்டினை நோக்கி பயணிக்கும் பாரதி கலை மன்றம், தாய் தமிழ் மக்களுக்கு வழங்கிய இந்த ஆண்டின் துவக்க விழாவான பொங்கல் திருவிழா மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! பொங்கல் பரிசாக “ஜரி வேர்ல்ட்” உரிமையாளர் திருமதி.குழலி ஆர்காட் அவர்கள் குலுக்கல் முறையில் இருவருக்கு பட்டுப்புடவைகளை பரிசாக வழங்கினார். வந்திருந்த மக்கள் அனைவருக்கும், இந்தியன் சம்மர் உணவகத்தில் இருந்து இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இறுதியாக,செயலாளர் திருமதி.சுபா கண்ணன் அவர்களின் நன்றியுரையுடன், பாரதி கலை மன்ற பொங்கல் விழா இனிதே நிறைவு பெற்றது.
கௌசல்யாதேவி நம்பி மற்றும் ராஜி வாஞ்சி
செய்தி குறிப்பிலிருந்து -ஷீலா ரமணன்