புதுச்சேரியில் வரும் 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை கடற்கரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாறி வருகிறது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர்
கொரோனா தொற்றால் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய சுற்றுலாத் துறை வருவாய் குறைந்தபோதும், அதை அரசின் தீவிர முயற்சி மூலம் மீட்டெடுத்து உள்ளோம்.புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரை சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்த, சுற்றுலா துறை வரும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை, கடற்கரை திருவிழாவை நடத்த உள்ளது.
காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா, சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கு ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், கடல்சார் விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலை நாட்டு இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சி, கருத்தரங்கு ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலும், கட்டுமர படகு செலுத்துதல், மிதிவண்டி மராத்தான், கடற்கரை வாலிபால், பட்டம் விடுதல் ஆகிய போட்டிகளும் நடக்கிறது.அதிகாலையில் மீன் உணவு தேடல், இசை, ஜிம்னாஸ்டிக், உறியடி, பேஷன் ஷோ என பல்வேறு நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் முதல் முறையாக நடைபெறும் இந்த விழா, இனி ஆண்டுதோறும் நடத்தப்படும். அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும்”. என வேண்டுகோள் விடுத்தார்.