வரலாற்றுச் சிறப்பு மிக்க டெல்லி விஜய் சவுக்கில் முப்படை வீரர்களும் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்றது.
ராணுவத்தின் 26 பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின் அணி வகுப்பும், இசை நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
சூரிய குடும்பம், புல்லட் ரெயில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்க ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்தியாவின் குடியரசு தின விழா கடந்த 26-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வை காண குவிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ராணுவத்தின் 26 பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின் அணி வகுப்பும், இசை நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. வழக்கமான சிறப்பு நிகழ்வுகளுடன், ட்ரோன்கள் மூலமான ‘வான் மின்னொளி’ நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முற்றிலும் இந்தியாவில் தயாரான 3,500 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், விடுதலையின் அமிர்த பெருவிழாவை கொண்டாடும் வகையில், புதிய மெட்டுக்கள் இசைக்கப்படுகிறது. சூரிய குடும்பம், புல்லட் ரெயில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்க ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளன.
குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்க வந்த வீரர்கள் தமது முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி நடத்தும் அணிவகுப்பே பாசறை திரும்புதல் எனப்படுகிறது. இந்நிகழ்வு டெல்லியில் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.