தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும்போது கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவற்றில் நகரத்து மாணவர்களை விட சற்றே பின்தங்கியுள்ளனர். அதனை ஈடுகட்டும் பொருட்டு அரசுப் பள்ளிகளில் குறிப்பாக கிராமப் புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வித் தொடர பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு.
2020ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% சிறப்பு உள்ஒதுக்கீடு தந்து கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருடந்தோறும் மருத்துவம் படிக்க வழிவகை செய்யப்பட்டது. அதேபோல கிராமப் புறத்திலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்து பள்ளிப்படிப்பை முடிக்கும் பெண்கள் பல சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வித் தொடர முடியாத ஓர் சூழல் உள்ளது. அதற்காக உயர்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும். இது கிராமப் புற மாணவிளுக்கு உயர்கல்வி தடையின்றித் தொடர உதவும்.
அதேபோன்று ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகளில் சேறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆகும் கல்விச் செலவை முழுவதும் தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஓர் ஊக்கமாக இருக்கும். பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்து முன்னணி கல்லூரிகளில் சேருவோர் தங்கள் பொருளாதார சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாத அவல நிலை உள்ளது. இது தமிழக அரசின் புது அறிவிப்பால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயணடைவார்கள்.
![](https://nritamil.com/wp-content/uploads/2022/09/images-62.jpeg)