கடந்த மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு குந்தலஹல்லி பகுதியில் செயல்படும் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக சிக்மகளூருவைச் சேர்ந்த முசாமில் ஷெரீப் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்தனர். மேலும் வெடிகுண்டுகளை உணவகத்தில் வைத்ததாக முசாவிர் உசேன் சாஹேப் மற்றும் அப்துல் மதின் தாஹா ஆகியோரை என் ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.
பல நாட்களாக தேடப்பட்டு வந்த முசாவிர் மற்றும் அப்துல் மதின் ஆகியோர் கொல்கத்தா அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த என்.ஐ.ஏ.அதிகாரிகள், தலைமறைவாக இருந்த முசாவிர் , அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில், அப்துல் மதின் தாஹா வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் கொல்கத்தா அருகே பெயர்கள் மற்றும் அடையாளங்களை மாற்றி போலி தகவல்களை அளித்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரளா, கர்நாடாகா, தெலங்கானா மற்றும் மேற்குவங்க காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகவே இருவரையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.