கிரீன் கார்டுக்கான எண்ணிக்கை வரம்பை நீக்க வழிவகை செய்யும் மசோதாவை அமெரிக்க நீதித்துறை எம்.பி.,க்கள் குழு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா சட்டமாக கொண்டு வரப்பட்டால் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் பயனடைவார்கள்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பல வெளிநாட்டினர் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடியேறுகின்றனர். அங்கு நிரந்தரமாக குடியேற வேண்டுமென்றால் கிரீன் கார்டு பெற வேண்டியது அவசியம். அதனால் கிரீன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு இது வரையில் ஒதுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை நீக்கும் வகையிலான மசோதாவை அமெரிக்க நீதித்துறை எம்.பி.,க்கள் குழு நிறைவேற்றியுள்ளது. குடும்பம் சார்ந்த குடியேற்றங்களுக்கான விசா எண்ணிக்கையை 7ல் இருந்து 15 ஆக அதிகரித்து வழங்கவும் அக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு அமெரிக்க அதிபரின் ஒப்புதலை பெற்றபின் சட்டமாக மாற்றம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.