மார்கழி கச்சேரி என்பது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சியாகும், இது உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் டிசம்பர் முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரை மார்கழி மாதத்தின் போது இசை மற்றும் நடனக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வருகை தருகின்றனர்.
இந்த காலகட்டத்தில், சென்னை நகரின் புகழ்பெற்ற சபாக்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் களைகட்டும். நகரமே கர்நாடக இசையில் திளைத்திருக்கும். டிசம்பர் (மார்கழி) இசை விழா, தற்போது பெரிய அளவில் வளர்ச்சியுற்று உலகின் மிகப்பெரிய கலை விழாவாக விளங்குகிறது.
1927 ஆம் ஆண்டு மியூசிக் அகேடமி தொடங்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக இசை விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள், செயல் விளக்கத்துடன்கூடிய இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெறத் தொடங்கின.