“திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கபடுகின்றன”, “திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்”, போன்ற பழமொழிகள் திருமணத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்ட நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் அனைத்திலும் துரிதங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் திருமண பந்தங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் கண்கூடாக காணத் துவங்கியுள்ளோம்.
சாதாரண தம்பதிகள் தொடங்கி, சமந்தா, தனுஷ் வரை விவாகரத்துக்களின் அலையாக அடித்துக் கொண்டிருக்கிறது நம் நாட்டில்.
சமீபத்தில் ஒரு நண்பனைக் காண நேர்ந்தது. திருமணம் முடிந்து ஆறு மாதங்களே ஆகியிருந்த நிலையில் விவாகரத்து என்னும் அதிர்ச்சிகர செய்தியை தெரிவித்தார். அதை விட அதிர்ச்சியளித்தது அவர் விவாகரத்திற்காக கூறிய காரணம். இரண்டு குடும்பங்களுக்குள்ளும் நடந்த கொடுக்கல் வாங்கலில், கணக்கில் இடித்த 750ரூபாய் பணம். ஆம்!
உங்களைப் போலவே தான் நானும் அதிர்ந்தேன். அவ்வளவு மலிந்து தான் போய்விட்டது திருமண பந்தமும் உறவுகளும். எங்கே நம்மில் பிழை ?
மதிப்பிழந்த உணர்வுகள்
இந்த துரித காலகட்டம் உலகை சுருக்குவதோடு அனைத்தையும் எளிதாக்குகிறது. காதல் தொடங்கி காமம் வரை இந்த காலகட்டத்தில் வெகு சுலபமாக கிட்டிடுகிறது. சுலபமாக கிடைக்கும் எதுவும் மதிப்பிற்குரியதாக இருப்பதில்லை என்பது போல் தான் இன்றைய உறவுகளின் பிரிவு அமைகிறது.
பொறுமையின்மை
இந்த கால கட்டம் மக்களை ஒருவித அவசரத்திலேயே வைத்திருப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. ஆண் பெண் இருவரும் சரிசமமாக சம்பாதிக்கின்றனர். ஒருவரைச் சார்ந்து இன்னொருவர் இருக்க வேண்டும் என்னும் நிலை இல்லாமல் இருப்பது இருவரிலும் ஒரு பொறுமையின்மையை ஏற்படுத்துகிறது. அதுவும் பிரிவுகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்திடுகிறது.
பொருளாதார சுதந்திரம்
ஆண் சம்பாதிக்கும் அதே அளவு பெண்ணும் சம்பாதிக்கிறாள். சொல்லப் போனால் ஆணைக் காட்டிலும் அதிகமாக. இந்தப் பொருளாதார சுதந்திரமானது, தற்சார்பை பிரதானப்படுத்துகிறது. ஒருவித கர்வத்தையும், தலைக்கணத்தையும் இருவருக்கும் தந்திடுகிறது. இதன் காரணமாக சிறு சிறு விஷயங்களுக்கு கூட இன்றைய தம்பதிகள் பொருந்திப் போக மறுக்கின்றனர்.
இல்லாமல் போன இசைவு
கடந்த கால கட்டத்தில் உறவுகள் கொண்டிருந்த இசைவை இந்த நாட்களில் பெரிதும் காண முடிவதில்லை. அனைவரும் ஒரே வீட்டில் இருக்கும் போதிலும் தங்களுக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு தனித் தனித் தீவாகவே வாழ்ந்து வருகின்றனர். கைப்பேசி இதை சாதிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதனாலேயே மனித உறவுகளுக்கான மதிப்பு சுருங்கி வருவதைக் கண்கொண்டு பார்த்து வருகிறோம்.
அன்பால் கட்டி எழுப்பப்படும் சமூகம் அறமுள்ளதாக உயர்ந்து நிற்கும். மாறாக அன்பைத் தொலைத்து உறவைத் தொலைத்து நிர்க்கதியாக நிர்மூலமாகிப் போகக் கூடிய ஒரு சமூகத்தை தான் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அன்பு செய்வோம்