இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணையில் ஏறினார். இருந்தபோதும் அவருக்கு முடிசூட்டு விழா நடக்காமல் இருந்தது.
இந்நிலையில் இன்று மன்னர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவில் உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.
முன்னதாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் மன்னர் சார்லஸ், அவரது மனைவியும், ராணியுமான கமீலா 6 குதிரைகள் பூட்டப்பட்ட மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட சாரட் வண்டியில் ராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அப்போது வழிநெடுகிலும் கொடியுடன் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தை வந்தடைந்ததும் மன்னர் முடிசூட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்றது.
இதில் மன்னராக சார்லசை அங்கீகரித்து கேண்டர்பரி ஆர்ச் பிஷப் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் வாழ்த்து முழக்கம் எழுப்பினர். அப்போது மன்னர் 3ம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக மக்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இதன் பிறகு மன்னரின் தலை மற்றும் உடல் பகுதியில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட புனித எண்ணை தேய்த்து அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில், அரச குடும்ப புனித உருண்டை மன்னருக்கு அளிக்கப்பட்டது.
பின்னர், மூத்த மதகுருமார்கள் புனிதப்படுத்தி, ஆசிர்வதித்த செங்கோலை மன்னர் சார்லசுக்கு வழங்கினர். இதைத்தொடர்ந்து மன்னர் சார்லஸ் தலையில் ஆர்ச் பிஷப் புனித எட்வர்ட்டின் மணிமகுடத்தை சூட்டி தங்க சிம்மாசனத்தில் அமரச் செய்தார்.
அப்போது கடந்த 1953ம் ஆண்டு இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்துக்கு சூட்டப்பட்ட கிரீடம் சார்லஸ் மனைவி கமீலா சார்லசுக்கு சூட்டப்பட்டது. இந்த முடிசூட்டு விழாவில் இந்திய அரசின் சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி டாக்டர் சுதிப் தன்கர் பங்கேற்றனர்.
அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் முடிசூட்டு விழாவையொட்டி லண்டன் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.