சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், “ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023” அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை நடத்தியது. இக்கணக்கெடுப்பு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள யானைகள், திட்ட இயக்குநரகத்தின் பரிந்துரையின் படி, யானைகளின் எண்ணிக்கையினை நேரடி மற்றும் மறைமுக முறைகளை பயன்படுத்தி கணக்கிடப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டின் 26 வனக்கோட்டங்களில் தொகுதி கணக்கிடுதல் முறை மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் நேரடியாக காணப்பட்ட யானைகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டு, யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்றது.
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2017-ல் 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் நான்கு பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சிமலை யானைகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையில், அதாவது 2477 யானைகளை கொண்டுள்ளது. இக்கணக்கெடுப்பின் மூலம் ஆண் யானை மற்றும் பெண் யானை சதவிகிதம் 1:2.17 ஆக உள்ளது.
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1855 யானைகளும் உள்ளன. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானைகளின் எண்ணிக்கையை விட மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் பல்வேறு யானை சரகங்களில் 1731 துறைப் பணியாளர் மற்றும் 368 தன்னார்வலர்கள், என மொத்தம் 2099 பேர் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
