இஸ்ரேலின் புராதான நகரான ஜெருசலேமுக்கு யூதர்களும், முஸ்லிம்களும் மாறி மாறி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, யூதர்கள் பெரும்பான்மையினராக கொண்ட இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பாலஸ்தீனத்துக்கும் அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்சா மசூதிக்கு, நேற்று அதிகாலை, ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடியிருந்தனர். அப்போது, அங்கிருந்த நூற்றுக்கணக்கான போலீசாருடன் பாலஸ்தீன இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் இது வன்முறயாக வெடித்தது. இருதரப்பிற்கும் இடையில் நடந்த சண்டையில், 152 பாலஸ்தீனர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலஸ்தீன இளைஞர்கள் கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், அதைத் தடுக்க போலீசார் ரப்பர் தோட்டாக்கள் மூலம் சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இதில் தொடர்புடைய, 100க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்துள்ளனர்.