கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் சங்கத்தினர் வலைப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் அமோக ஆதரவினாலும், தீவிர ஈடுபாட்டினாலும் இந்த நிகழ்வு மாபெரும் வெற்றி பெற்றதாக அறிவிப்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.பழைய நண்பர்களைச் சந்திக்கவும், புதிய நண்பர்களை உருவாக்கவும், தமிழ்நாட்டின் செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் கலாச்சார நிகழ்ச்சிகளை ரசிக்கவும் இந்த விழா வழிவகை செய்துள்ளது என்றும் இந்நிகழ்வு வாழ்வின் மறக்கமுடியாத மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது என்றும் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.
இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தில் அலெக்சாண்டர் அவர்களின் நகைச்சுவை கலந்த இன்னிசை விருந்தும் அறுசுவை வாழை இலை விருந்தும் மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தது.
தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் கடந்த 25 ஆண்டு காலப் பயணத்தில் உறுதியுடன் தொடர்ந்து செல்லும் கொலம்பஸ் தமிழ் சங்கத்தினருக்குப் பாராட்டுக்களையும் ஆதரவையும் தெரிவிக்கின்றோம். “நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அயராது உழைத்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் எங்களது சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அர்ப்பணிப்பும் ஆதரவும் நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்ததில் உறுதுணையாக இருந்தது.” என்றும் கொலம்பஸ் தமிழ் சங்கத்தினர் தங்களது வலை பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மே 13 அன்று சிறப்பு பட்டிமன்றத்தில் திரு.ராஜா & திருமதி பாரதி பாஸ்கர் முதலானோர் பங்கேற்க உள்ளனர். மே 13 அன்று, உறுப்பினர்கள் சாரல் இதழின் சிறப்பு 25வது ஆண்டு பதிப்பையும் பெறலாம் என்றும் புது உறுப்பினர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் அவர்களது பதிவில் கூறியுள்ளனர்.