முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது: “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, எங்களது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. ஆனால், அந்தக் கொலையாளிகளை விடுவித்ததை ஒரு சிலர் திருவிழாவாக கொண்டாடுவதைப் பார்க்க நேரும்போது, இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது. எங்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனிதாபிமானத்தோடு வாழ்வதுதான் மனிதத்தன்மை என்று நாங்கள் கருதுகிறோம். பழிவாங்குவது மனித தன்மையல்ல. மிருகங்களுக்குக்கூட பழிவாங்குகிற எண்ணம் கிடையாது. ஆனால், இதுபோல ஒரு சிலர் பழிவாங்கும் எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.
திமுகவுடன் கூட்டணி வருவதற்கு முன்பே, எங்கள் கூட்டணியில் இருக்கிற அவர்கள் , ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறியவர்கள்தான். அது அறிந்தே தான் நாங்களும் கூட்டணி வைத்துக்கொண்டோம். அவர்கள் கொள்கையை அவர்கள் பின்பற்றுகின்றனர். எங்கள் கொள்கையை நாங்கள் கூறுகின்றோம். இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் கூறினார்