கொரோனா வியாபாரம் – லாபம் கொய்யும் மருந்து நிறுவனங்கள்

கோவிட் 19 செய்திகள்

இது வரை மனித இனம் கண்டிருக்காத வகையிலான வித்தியாசப்பட்ட நோய்த்தாக்குதல் இந்த கொரோனா. வெகு சுலபமாக பரவும் திறன், சுலபமாக நம் உடலோடு இணையும் திறன், அடிக்கடி பரிணாம மாற்றம் அடைந்து கொண்டே இருப்பது போன்றவை இந்த வைரசை மிகக் கொடூரமான வைரசாக உருமாற்றியுள்ளது. உடலின் அனைத்து உறுப்புகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை 38 இலட்சம் உயிர்களை இந்த கொரோனா காவு வாங்கியுள்ளது. இது கணக்கில் பதியப்பட்டுள்ள எண்ணிக்கை மட்டுமே. கணக்கில் வராத எவ்வளவோ மரணங்களும் நிகழ்ந்துள்ளன. அவற்றைக் கணக்கெடுத்தோமானால் இந்த எண்ணிக்கை மூன்று நான்கு மடங்கு அதிகரிக்கக்கூடும். இந்த நிலையில் தான் கொரோனா வைரசிற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன.

மக்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும் நேசித்தவர்களையும் இழந்து தவித்து வரும் அதே நேரத்தில் தான் கொழிக்கும் லாபத்தில் திளைத்து வருகின்றன மருந்து நிறுவனங்கள். கொரோனாவையும், அதன் உப நோய்களையும் மையமாய் வைத்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கும் பொருட்களுக்கும் உலகளவில் கடும் கிராக்கி நிலவி வருகிறது. இதை சாதகமாய் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் மருந்து நிறுவனங்கள் மற்ற மருந்துகளின் உற்பத்தியைக் குறைத்து வெறும் கொரோனா மருந்தை மட்டும் உற்பத்தி செய்யும் செயலில் இறங்கியுள்ளனர்.

கொரோனாவுக்கான பிரதான தடுப்பூசி நிறுவனமான ஃபைசர் தனது இந்த ஆண்டிற்கான இலாப அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 360 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை தடுப்பூசி மூலம் ஈட்டியுள்ளதாயும், இதை இந்த ஆண்டு இறுதிக்குள் 2600 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாயும் தெரிவித்துள்ளது. இதுவரையில் பெரிதான லாபம் எதையும் ஈட்டியிருக்காத ஆஸ்ட்ரா சென்கா நிறுவனமும் தடுப்பூசி மூலம் கல்லாக்கட்டி தன் லாபக் கணக்கை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
மாடர்னா நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோடெக் நிறுவனம் ஆகியவை தங்களின் முந்தைய நஷ்டங்களை ஈடுகட்டி முதன் முறையாக லாபத்தை இருமடங்காக்கியுள்ளன.
இந்த நிறுவனங்களின் வர்த்தகப் பங்குகளும் நல்ல உயரத்தை எட்டியுள்ளது. இது மேலும் உயரும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தியா உட்பட பல நாடுகளில் தடுப்பூசிக்கு இன்னமும் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தங்கள் மருந்துகளை நேரடியாய் இந்தியாவில் விற்பனை செய்ய தங்களுக்கும் இந்திய நிறுவனங்களைப் போல் வரிச்சலுகைகளும் இதர சலுகைகளும் வேண்டும், அது வரையில் நேரடி விற்பனையை மேற்கொள்ள மாட்டோம் என மறைமுகமாக மிரட்டி ஃபைசர் உள்ளிட்ட வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் பேரம் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
ஃபைசருடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவாக்சின் 1410 ரூபாய்க்கும் ஆஸ்ட்ரா சென்காவுடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு 780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • சிறப்பு நிருபர்
    NRI தமிழ்

Leave a Reply

Your email address will not be published.