கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில், பெயரிடப்படாத வைரஸ் ஒன்று சீனாவின் வுஹான் நகர மக்களைத் தாக்கி கொத்து கொத்தாக கொன்று குவிக்கத் துவங்கியது. உலகின் கவனத்தை அது பெறத் தொடங்கும் முன்னரே பல்வேறு நாடுகளுக்கும் அது பரவி பெருந்தொற்றாய் உருப்பெற்றது. இதுவரையில் அறியப்படாத, மனிதர்களைத் தாக்கியிராத புது வித வைரஸ் இனமான இதன் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
கொரோனா வைரஸானது இதுவரையில் உலகளவில் 168 மில்லியன் நபர்களை தொற்று பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதோடு 3.5 மில்லியன் இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன் தங்கள் நாட்டின் உளவு அமைப்பிற்கு, ” கொரோனாவின் தோற்றத்தைப் பற்றி தீவிரமாய் ஆராய்ந்து 90 நாட்களில் தன்னிடம் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு”, உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ” கொரோனா தொற்றின் தோற்றமானது மிருகங்களிலிருந்து மனிதருக்குப் பரவியதா இல்லை அங்கிருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்திலிருந்து வெளிக்கசிந்ததா என்பது குறித்தான தெளிவுபடுத்தப்படல்கள் இல்லை எனவும், சீனா எந்தவித ஒளிவு மறைவும் இன்றி தங்களிடம் உள்ள தகவல்களை வெளிப்படையாக ஒப்படைக்க வேண்டும் எனவும், தங்களைப் போன்றே சிந்தனை கொண்ட மற்ற நாடுகளுடன் சேர்ந்து சீனாவுக்கு அழுத்தத்தை அதிகரிப்போம்”, எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வருட துவக்கத்தில் சீனா சென்றிருந்த உலக சுகாதார மையத்தின் ஆய்வுக்குழு, கொரோனா ஆய்வகத்தில் உருவானதாக இருக்க வாய்ப்புகள் இல்லை எனக் கூறி அறிக்கையை தாக்குதல் செய்திருந்தது.
முன்னதாக அமெரிக்க அரசாங்கத்தின் மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பாசி, ” கொரோனா இயற்கையிலேயே உருவானது என்னும் கூற்று நம்பத்தகுந்ததாக இல்லை”, என கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.