மாணவர்களின் தகவல் திருடப்பட்ட நிலையில், சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் தனித் தகவல்கள் திருடப்பட்ட புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலருக்குச் சம்மன் அளித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை அலுவலக இணையதளத்திலிருந்து பள்ளி மாணவர்களின் தகவல்கள் அண்மையில் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான பிரத்யேக செய்தியை நியூஸ் 18 வெளியிட்டது.
இதையடுத்து மோசடி தொடர்பாகத் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் திருட்டு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட திட்ட அலுவலராக உள்ள புண்ணியகோடிக்கு சம்மன் அனுப்பியுள்ள போலீசார் விசாரணை செய்தனர்.