வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது

செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி வானிலை

வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 7ஆம் தேதி காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை தீவிர புயலாக இருந்த மாண்டஸ், மீண்டும் வலுவிழந்து புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுவைக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடையில் மாமல்லபுரத்தில் 9ஆம் தேதி இரவு முதல் 10ஆம் தேதி காலை வரை கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணிக்கு மாமல்லபுரத்திலிருந்து சுமார் 100கிமீ தொலைவிலிருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது மாண்டஸ் புயல். நேற்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை சுமார் 3 மணிக்கு கரையை கடந்தது.
புயலால் பலத்த காற்று வீசியதால், கடலோரப்பகுதிகளில் உள்ள பொருட்கள் தூக்கிவீசப்பட்டன. சாலையோர கடைகளில் இருந்த இரும்பு தகடுகள் பறந்தன. சென்னையில் மட்டும் 48 மரங்கள் வேரோடு சாய்ந்ததாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. மேலும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 5000 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. கோவளம் கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் காற்றின் வேகத்தில் சின்னாபின்னமாகின.
மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வந்தபோது, வீசிய பலத்த காற்றால், பல போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. ஈசிஆர் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. ஓஎம்ஆர் சாலையிலிருந்து ஈசிஆர் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்கள் கொண்ட 27 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னைக்கு வந்த 9 விமானங்கள் புயல் காரணமாக தரையிரங்கமுடியாமல், பெங்களூர் ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், அதிகபட்ச மழை பொழிவு குறித்த தகவலை தெரிவித்தார்.
காட்டுப்பாக்கத்தில் 142 மில்லிமீட்டரும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 மில்லிமீட்டர் மழையும் பதிவானதாக தெரிவித்தார். மீனம்பாக்கத்தில் 103 மில்லிமீட்டரும், மாதவரத்தில் 87 மில்லிமீட்டரும், திருவள்ளூரில் 83 மில்லிமீட்டர் மழையும் பதிவானதாக கூறினார். மேலும் சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.