தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சிப் பெறுவதில் பல நன்மைகள் இருந்தாலும் அதில் பல தீமைகளும் உள்ளது என்பதை நாம் நிச்சயம் உணர்ந்தே ஆக வேண்டும். ஸ்மாரேட் போன்களின் அவசியம் இன்றையக் காலகட்டத்தில் மிக இன்றியமையாததாக இருந்தாலும், அதனை பயன்படுத்துவோர் அதீத பயன்பாடு சில நேரங்களில் ஆபத்தை விளவிக்கும் என்பதையும் உணர வேண்டும்.
ஸ்மார்ட் போன்களின் வருகையால் தனி கேமராக்களின் அவசியம் மிகவும் குறைந்துவிட்டது. ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமராக்களே அதிக மெகாபிக்சல் கொண்டதாக இருப்பதால் அதுவே புகைப்படங்கள் எடுக்க போதுமானதாகவும் இருக்கிறது. ஸ்மார்ட் போன்களில் பின் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா முன்னால் உள்ளவர்களை புகைப்படம் எடுக்க உதவுவது போல் போன் முன்னே பொருத்தப்பட்டிருக்கும் கேமரா செல்ஃபி எடுக்க பயன்படுகிறது. செல்ஃபி என்பது தங்களை தாங்களே புகைப்படம் எடுத்துக்கொள்வதாகும்.
இந்தவொரு வசதியால் எங்கேயும் எந்நேரமும் யாருடைய தயவும் இல்லாமல் புகைப்படம் எடுக்கமுடியும். இதுவே பல நேரங்களில் ஆபத்தாக முடிகிறது. இந்த ஆபத்து விபரீதமாகி உயிரையே எடுக்கும் நிலைக்குப் போகிறது. செல்ஃபி எடுக்குறோம் என்ற பெயரில் மலை உச்சியில், வேகமாக பெறுக்கெடுத்து ஓடும் ஆற்றங்கரையோரம், கடல்சீற்றத்தின் முன், அருவிகளின் பக்கத்தில், ஓடும் ரயில் அருகில், தண்டவாளத்தில் என அனைத்து இடங்களிலும் ஸ்மார்ட் போனோடு சென்றுவிடுகின்றனர்.
கடந்த மாதம் கொடைக்கானல் மலைப் பகுதியில் மழைப்பெய்து பாதை மிக மோசமாக இருந்த சூழலில் வாலிபர் அருவிக்கு முன் செல்ஃபி எடுக்க முயன்று பாறை வழுக்கி ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் பாறைகளின் இடுக்கில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தமாதிரியானச் சூழலில் மக்கள் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தாலும் ஆர்வக்கோலாறில் ஆபத்தை உணராமல் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்.