இலண்டன் பல்கலைக்கழகத்தின் SOASல் தமிழ் மொழித் துறை உலக அரங்கில் தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி!

ஐரோப்பா

இமயம் போன்ற உயர்ந்த ஞானமும், பெருங்கடலின் ஆழம் போல ஆழ்ந்த அறிவும், ஆகாயம் போன்ற பரந்த வாழ்வியல் தத்துவங்களையும் கொண்ட தமிழ் மொழியின் சிறப்பு உணர்ந்த அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்!

நம் தாய் தமிழின் சுவையை அறிந்திட்ட நாம், அதன் பெருஞ்சுவையை தமிழின சந்ததியரும், பிற மொழி ஆர்வலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இலண்டன் பல்கலைக்கழகத்தின் School of Oriental and African Studies (SOAS) ல் தமிழ்த் துறையை உருவாக்கிடப் பல்கலைகழகத்தின் நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கான அனுமதிக் கடிதத்தை, 18 சூலை 2018 அன்று இலண்டன் தமிழ் ஆர்வலர்களுக்கு வழங்கினர்.

1918ம் ஆண்டில் SOAS துவக்கப்பட்டது. கல்லூரி துவங்கிய காலம் முதல், தமிழ் படிப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் நிதி பற்றாக்குறையினாலும், மாணவர் சேர்க்கையின்மையினாலும் தமிழ் மொழித்துறை 1995 – 2000 கால கட்டத்தில் நின்றுபோனது. தற்போது ஐக்கிய இராச்சியத்தில் (UK) வசிக்கும் பல்வேறு தமிழ் ஆர்வலர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் தமிழ் மொழிக்கான துறை மீண்டும் SOASல் தொடங்குவதற்கான சூழல் இன்று மலர்ந்துள்ளது. உலக அரங்கில் சிறந்து விழங்கும் தமிழ் ஆய்வாளர்களான Prof. John Marr, Stuart Blackburn, மற்றும் David Shulman ஆகியோர்களை உருவாக்கியப் பெருமை இலண்டன் பல்கலைக்கழகத்தையே சாரும்.

இங்கு உருவாக உள்ள தமிழ்த் துறையானது, ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்கும் தமிழ் இருக்கையாக மட்டும் இல்லாமல், முழுமையான தமிழ்த் துறையாக அமைவதால், தமிழ்துறைக்கான தலைவரையும், பேராசியர்களையும் மற்றும் விரிவுரையாளர்களையும் கொண்டு தமிழில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளையும் மேற்கொள்ள இருப்பதால், உலக அரங்கில் தமிழ் ஒரு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மொழியாக சிறந்து விழங்க இத்துறை வழிவகை செய்யும்.

தமிழில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களை ஊக்கப்படுத்த, நான்கு மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவில் இருந்து வரும் இரு மாணவர்களுக்கும், உலகின் பிற பகுதியில் இருந்து வரும் இரு மாணவர்களுக்கும் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த வாய்ப்பு தமிழ் மொழியின் பெருமைகளை பல்வேறு நாட்டவரும் படித்து செல்ல ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மேலும் ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பல்வேறு தமிழ் மொழி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழிக்கான GCSE தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்கள் பல்கலைப் படிப்புகளுக்குச் செல்லத் தேவையான கூடுதல் UCAS புள்ளிகளை (Universities and Colleges Admission Service) வழங்க இத்தமிழ்த்துறை ஆவன செய்யும். இது ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சிறந்தப் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்ய கூடுதல் அங்கீகாரத்தை அளிக்கிறது.

இலண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் மிகப் பழமையான தமிழ் நூல்களும், அரிய குறிப்பேடுகளும் மற்றும் ஓலைசுவடிகளும் உள்ளன. இந்த ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய நூல்களை மின்னாக்கம் செய்து, உலகெங்கும் பரவி வாழும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்வதும் இத்துறையின் நோக்கங்களில் ஒன்றாகும். இலண்டன் SOAS ல் தமிழ்த்துறை அமைவது அறிவியல் மற்றும் மருத்துவம் போன்றத் துறைகளில், தமிழர்களின் தொன்மையையும், சிறப்புகளையும் உலக அரங்கில் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அறிவிப்பதற்காகவும், அதற்கான நிதியை திரட்டுவதை ஆரம்பித்து வைப்பதற்கான தொடக்க விழாவினை, பல்கலைக்கழக உறுப்பினர்களும், ஐக்கிய இராச்சியத் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து அக்டோபர் 14ம் தேதி, மதியம் 1:30 மணி அளவில் SOAS வளாகத்தில் உள்ளத் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு, அதன் பின்னர் அவ்வளாகத்தில் உள்ள Brunei Gallery Lecture Theatre (BGLT) ல் நடத்த உள்ளார்கள். உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் ஆசியும், உன்னதமான ஆதரவும் தந்து, இம்முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றிட துணைநிற்கவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
மேலதிகத் தகவல்களுக்கு: https://www.soas.ac.uk/south-asia-institute/events/14oct2018-tamil-studies-campaign.html

இவண்,
ஐக்கிய இராச்சியத் தமிழர்கள்