மறைசாட்சி தேவசகாயம் – ஒரு வரலாறு

ஆன்மீகம்

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 1712ல் பிறந்த தேவசகாயத்தின் இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அடி முறை உள்ளிட்ட கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். போர் பயிற்சியிலும் சிறந்து விளங்கியிருந்த இவர், திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மாவின் படையில் பணியாற்றி வந்தார். நீலகண்டனுக்கு திருமணம் ஆன பின், அவரை அரசவை அலுவலராக நியமித்தார் அரசர்.

டச்சு படை தளபதி டிலனாய் என்பவரை மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் போரில் சிறைபிடித்து வந்தார். கத்தோலிக்கரான டிலனாய் கைதியாக இருந்த போதும், மன்னரின் மனதைக் கவர்ந்து, அவரது படைத்தளபதியானார். இதனால், நீலகண்டனுக்கும், டிலனாய்க்கும் பழக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உருவானது. நீலகண்டனுக்கு, டிலனாய் இயேசு போதனைகளை எடுத்துக் கூறி வந்தார். இதனால், மனமாற்றமடைந்த நீலகண்டன் 1745ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி தேவசகாயம் என்று பெயர் மாற்றம் பெற்றார்.

மதம் மாறியதால், மன்னர் அவர் மீது கடுங்கோபம் கொண்டார். அவர் மீது தேச துரோகம் மற்றும் உளவுபார்த்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதுடன் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, சிறையிலிட்டு துன்புறுத்தப்பட்டார். 1752 ல் தேசகாயம், ஆரல்வாய்மொழி காட்டில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் பாறையில் இருந்து உருட்டிவிடப்பட்டது. அவரது உடலின் எஞ்சிய பாகங்களை கண்டுபிடித்து சேகரித்த கிறிஸ்தவர்கள், கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் அடக்கம் செய்தனர். இதைனையடுத்து தேவசகாயத்தின் கதை கத்தோலிக்கர் மத்தியில் பரவியது.

அவரின் கல்லறையில் வேண்டுவதால் பல்வேறு அற்புதங்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அவருக்கு 2012 ஆம் ஆண்டு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டு இப்போது புனிதர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது அனைத்தும் கட்டுக்கதை எனவும் ஒரு சாரர் வாதித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.