தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பாக நாற்பத்தி எட்டாவது தேசிய தமிழ் மாநாடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பத்மஸ்ரீ விஜய் அமிர்தராஜ் அவர்கள் மே 27 2022 வெள்ளி அன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அமெரிக்க முதலீட்டாளர்கள் சார்பாக தகவல் தொழில்நுட்பம், இந்திய-அமெரிக்க சுயதொழில் முனைவோர், தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் , வளர்ச்சி பாதை போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட்டன. பின்னர் சுயதொழில் முனைவோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் இயல் இசை நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து விழா மலர் திருமதி ஷீலா ரமணன் அவர்களால் வெளியிடப்பட்டது.
பத்ம பூஷன் சங்கீத கலாநிதி கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்கள் பாரதியார் பாடல்களை பாடி பாரதி 100 நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
உடல் நலத்தைப் பேணிக்காக்கும் யோகா பயிற்சியும் கொஞ்சும் சலங்கை நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நீயா நானா கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கிய குழந்தைகள் வளர்ப்பில் பாரம்பரிய இந்திய முறைகள் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. எமலோகத்தில் 5ஜி எனும் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான மகாபலிபுரம் பகீரத தபசு புடைப்புச் சிற்பங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
மூன்றாம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான பரதம் பறை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்காப்பு கலைகளான சிலம்பம், அடிமுறை மற்றும் பாரம்பரிய நடன கலைகளான பரதம் பாம்பாட்டம் காவடி ஆட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் கரகம் புலியாட்டம் கும்மியாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முனைவர் திரு ஞானசம்பந்தம் ஐயா அவர்கள் இலக்கியமும் நகைச்சுவையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முனைவர் திரு எஸ் ஜே அப்பன், மரபணுவியல் ஆராய்ச்சியாளரான முனைவர் திரு வைத்தியலிங்கம் ஜி. தேவ் மற்றும் திரு. சி.கே மோகனம் ஆகியோருக்கு அவர்தம் சேவைகளை பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பத்ம பூஷன் விருது பெற்ற பாடகி சின்னகுயில் சித்ரா மற்றும் பின்னணி பாடகர் சத்யபிரகாஷ் உடன் சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் பட்டாளம் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சி அனைவரின் மனதையும் கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் திரட்டிய நிதியை தமிழ்நாடு அறக்கட்டளை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்க முன்வந்துள்ளது