உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த நிலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோடைகாலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுபடுத்த ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாபயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுசூழல் தொடர்பான வழக்குகளை நேற்று நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீலகிரி மற்றும் திண்டுகல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜர் ஆகியிருந்தனர். அப்போது ஊட்டி, கொடைகானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனம் ஆய்வு செய்யவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. அதுமட்டுமின்றி அரசு தக்கல் செய்யபட்ட அறிக்கையில், ஊட்டிக்கு தினமும் 1,300 வேன்கள் உட்பட 20,000 வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கபட்டது. இத்தனை வாகனங்கள் சென்றால் நிலமை மிகவும் மோசமானதாக மாறும் எனவும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாது எனவும், சுற்றுசூழல் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் வருத்தம் தெரிவித்த நீதிபதிகள் சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கை எடுக்கும் வரை இடைகாலமாக ஒருசில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.இதனை அடுத்து கொரோனா காலத்தில் பின்பற்றபட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுகல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இ-பாஸ் வழங்கும் முன் வாகனங்களில் வருபவர்களிடம் என்னமாதிரியான வாகனம், அந்த வாகனத்தில் எத்தனைபேர் வருகின்றனர். எத்தனை நாட்கள் சுற்றுலா, தொடர்ந்து அங்கு தங்குவார்களா என்பது குறித்து தகவல்களை பெற வேண்டும் என சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.மேலும் இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் அதே சமயம் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இ-பாஸ் நடைமுரை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.